UPDATED : டிச 22, 2023 02:45 AM
ADDED : டிச 20, 2023 10:34 PM

புதுடில்லி,: கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளதை அடுத்து, அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று ஆலோசனை நடத்தினார். மாநிலங்களில் சுகாதார வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்திய அவர், ''தொற்று பரவலால் அச்சப்பட தேவையில்லை; ஆனால் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்,'' என, தெரிவித்தார்.
நாடு முழுதும் 2,300 பேருக்கு தற்போது கொரோனா தொற்று பாதிப்பு உள்ளது. நேற்று ஒரே நாளில் 600க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனா தொற்றின் புதிய வகையான 'ஜெ.என்.1' நம் நாட்டில் முதல் முறையாக கடந்த 8ம் தேதி கேரளாவில் கண்டறியப்பட்டது.
மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கேரளா, மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் கொரேனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. கேரளாவில் மட்டும் நேற்று ஒரே நாளில் 292 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கேரளாவில் கொரோனாவால் மூவர் நேற்று உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து, பல்வேறு மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று ஆலோசனை நடத்தினார்.
அப்போது அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாவது:
அறிகுறிகள், தொற்று தீவிரத்தின் அடிப்படையில் திட்டங்கள் வகுத்து சுகாதார வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
நாம் அதிகபட்ச விழிப்புடன் இருக்க வேண்டிய அதே நேரத்தில், அச்சப்பட தேவையில்லை. சீனா, பிரேசில், ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் தொற்று பரவல் அதிகரிப்பதால், புதிய வகை வைரஸ் குறித்து நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.
அனைத்து மாநிலங்களும் தேவையான அளவுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள், மருந்துகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், தடுப்பூசிகளின் கையிருப்பை உறுதி செய்ய வேண்டும்.
பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், பதற்றத்தை ஏற்படுத்தும் தவறான செய்திகள் பரவுவதையும் தடுக்க மாநில அரசுகள் முனைப்பு காட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
'ஜெ.என்.1' வகை கொரோனா பரவலை கண்காணித்து வரும் உலக சுகாதார நிறுவனம், இந்த வகை தொற்று அதிக வீரியமற்றது என்றாலும், குளிர்காலம் துவங்கும் பகுதிகளில் வேகமாக பரவ வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
இன்ப்ளூயன்ஸா உட்பட, சுவாச செயல்பாட்டை பாதிக்கும் அனைத்துவிதமான தொற்றுகளும் உருமாறுவது இயல்பு தான். இதற்கான சிகிச்சையும், தடுப்பூசிகளும் நம்மிடம் தயார் நிலையில் உள்ளன. எனவே அச்சம் தேவையில்லை.சந்திரகாந்த் லஹரியா, மூத்த மருத்துவ நிபுணர்.
தமிழகத்தில் கொரோனா பயமில்லை
சிங்கப்பூரில், 30,000 பேருக்கு மிதமான கொரோனா பாதிப்பு, ஒமைக்ரான்
மாற்றத்தால் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், 20 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் உள்ளனர். காய்ச்சல் அதிகமாக உள்ள பகுதிகளில் பரிசோதனை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, தமிழகத்தில் கொரோனா பயமில்லை; பீதியடைய வேண்டாம். - சுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்

