புறாக்களுக்கு இரை போடாதீங்க மாநகராட்சி அறிவுறுத்தல்
புறாக்களுக்கு இரை போடாதீங்க மாநகராட்சி அறிவுறுத்தல்
ADDED : ஆக 09, 2025 10:40 PM
புதுடில்லி:பறவை எச்சத்தால், சுகாதாரப் பிரச்னைகள் ஏற்படுவதால், பொது இடங்களில் புறாக்களுக்கு உணவளிக்க வேண்டாம் என டில்லி மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, டில்லி மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:
டில்லி மாநகரின் பல இடங்களில் பொதுமக்கள், புறாக்களுக்கு தானியம் வழங்குகின்றனர். இதனால், அந்தப் பகுதிகளில் தேங்கும், புறாக்களின் எச்சங்கள் சுவாச நோய் உட்பட பல சுகாதாரப் பிரச்னைகள் ஏற்படுகின்றன.
சாலைகள், நடைபாதைகள், கட்டடங்களின் பால்கனிகள் மற்றும் மொட்டை மாடிகளில் புறாக்களுக்கு உணவளிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
இந்தப் பிரச்னைகள் அதிகரித்தால், எதிர்காலத்தில், இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.
புறாக்களுக்கு உணவளிக்கும் பொது இடங்களில் கழிவுகளை சுத்தம் செய்யும் போது, துாசியுடன் கலந்து, 'ஹைபர்சென்சிட்டிவிட்டி நிமோனிடிஸ்' உள்ளிட்ட சுவாச நோய்கள் ஏற்படுத்தும் என, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் சமீபத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு பதில் அளிக்குமாறு டில்லி அரசு, டில்லி மாநகராட்சி, புதுடில்லி முனிசிபல் கவுன்சில் மற்றும் பொதுப்பணித்துறை ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
புறா கழிவுகள் கடுமையான ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன. மேலும், நுரையீரல் தொற்று மற்றும் பைப்ரோஸிஸ் போன்ற நாள்பட்ட சுவாச நோய்களை ஏற்படுத்தும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை உருவாக்குகின்றன என டாக்டர்கள் கூறியுள்ளனர்.
எனவே, மக்கள் தங்கள் ஆரோக்கியத்துக்காகவும், புறாக்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும் அதற்கு உணவளிப்பதை நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

