நாய்களை அகற்ற மாநகராட்சி நோட்டீஸ்; வீட்டிலிருந்து மாயமான உரிமையாளர்
நாய்களை அகற்ற மாநகராட்சி நோட்டீஸ்; வீட்டிலிருந்து மாயமான உரிமையாளர்
ADDED : ஆக 30, 2025 06:35 AM
திருவனந்தபுரம்; உயர்ரக வளர்ப்பு நாய்களை வீட்டில் வளர்க்க எதிர்ப்பு ஏற்பட்டதால் நாய்களையும் தன் மகனையும் குடும்பத் தலைவர் விட்டு சென்றார். பசியில் குரைத்த நாய்களை சமூக ஆர்வலர்கள் மீட்டனர்.
கேரள மாநிலம் கொச்சி அருகே ஏரூர் பகுதியைசேர்ந்தவர் சுதீஷ்குமார். மனைவி ஜெர்மனியில் பணிபுரிந்து வருகிறார். மூன்றாம் வகுப்பு படிக்கும் மகனுடன் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் 26 உயரக நாய்களை வளர்த்து வந்தார். அவை குரைத்துக் கொண்டே இருந்ததால் பக்கத்து வீட்டினர் புகார் தெரிவித்தனர். நாய்களை வேறு இடத்துக்கு மாற்றுமாறு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. இதைத்தொடர்ந்து சுதீஷ்குமார் தனது வீட்டில் இருந்து மாயமானார்.
வெளியே சென்ற தந்தை திரும்பி வராதது குறித்து ஜெர்மனியில் பணிபுரியும் தாய்க்கு மகன் தகவல் தெரிவித்தார். சிறுவனை உறவினர்கள் வந்து அழைத்துச் சென்றனர். ஆனால் நாய்கள் அனைத்தும் அந்த வீட்டிலேயே இருந்தன. பசியால் நாய்கள் அனைத்தும் குரைத்துக் கொண்டே இருந்தன. போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் விலங்கு ஆர்வலர்களை அழைத்து நாய்களை ஒப்படைத்தனர். ஒவ்வொரு நாயின் மதிப்பும் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. நாய்களை வளர்க்க தடை விதித்ததால் மனமுடைந்து சதீஷ்குமார் மாயமானதாக தெரியவந்துள்ளது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

