நவம்பர் மாதம் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1.70 லட்சம் கோடி
நவம்பர் மாதம் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1.70 லட்சம் கோடி
UPDATED : டிச 01, 2025 06:05 PM
ADDED : டிச 01, 2025 05:53 PM

புதுடில்லி: நடப்பு 2025 நவம்பர் மாதம் நாட்டின் மொத்த ஜி.எஸ்.டி., வரி வசூல் 1.70 லட்சம் கோடி ரூபாயாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து மத்திய அரசு தரப்பில் வெளியிட்டுள்ள விவரம் வருமாறு;
இந்தாண்டு நவம்பர் மாத வரி வசூலை, முந்தைய ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 0.7 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தாண்டு ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்து 276 கோடி வசூல் ஆகியுள்ளது. எனினும், அக்.2025ல் இந்த வரி வசூல் ரூ.1 லட்சத்து 96 ஆயிரம் கோடியாக இருந்தது.
கடந்த செப்டம்பர் 22ல் நூற்றுக்கணக்கான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு குறைத்தது. மேலும் வரி அடுக்குகளிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டது. 2025ம் ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரை ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.14 லட்சத்து 75 ஆயிரத்து 488 கோடியாக இருக்கிறது.
ஜி.எஸ்.டி., வரி வசூல் நவம்பர் மாதத்தில் சில மாநிலங்களில் வளர்ச்சி கண்டுள்ளது. சில மாநிலங்களில் சரிந்துள்ளது. அருணாச்சல், நாகாலாந்து, மணிப்பூர், மேகாலயா, அசாம் மாநிலங்களில் ஜிஎஸ்டி வரி வசூல் அதிகரித்துள்ளது.மகாராஷ்டிராவில் 3 சதவீதமும், கர்நாடகாவில் 5 சதவீதமும், கேரளாவிலும் 7 சதவீதமும் வரி வசூல் அதிகரித்துள்ளது. ஆனால், குஜராத்தில் 7 சதவீதமும், தமிழகத்தில் 4 சதவீதமும், உ.பி.,யில் 7 சதவீதமும், ம.பி.,யில் 8 சதவீதமும், மேற்கு வங்கத்தில் 3 சதவீதமும் வரி வசூல் குறைந்துள்ளது.

