வாகன நெரிசல் உள்ள சாலைகள் தரம் உயர்த்த மாநகராட்சி திட்டம்
வாகன நெரிசல் உள்ள சாலைகள் தரம் உயர்த்த மாநகராட்சி திட்டம்
ADDED : டிச 10, 2024 07:15 AM
பெங்களூரு: பெங்களூரின் சாலைகளில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது. மிகவும் அதிகமான வாகன நெருக்கடி உள்ள 337 கி.மீ., தொலைவிலான 227 சாலைகளை தரம் உயர்த்த, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, பெங்களூரு மாநகராட்சி உயர் அதிகாரிகள் கூறியதாவது:
நகரில் மக்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. 1.04 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வாகன எண்ணிக்கை அதிகரிப்பால், சாலைகளை தரம் உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மிகவும் அதிகமான வாகன நெருக்கடி உள்ள 337 கி.மீ., தொலைவிலான 227 சாலைகளை தரம் உயர்த்த, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
சாலைகளை நிர்வகிக்கும் செயல் நிர்வாக பொறியாளர்கள், மண்டல அளவிலான செயல் நிர்வாக பொறியாளர்கள் ஒருங்கிணைந்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. குழுக்கள் ஆய்வு செய்து சிபாரிசு செய்யும் சாலைகள் தரம் உயர்த்தப்படும்.
தரம் உயர்த்த அடையாளம் காணப்பட்ட 227 சாலைகளில், 122 சாலைகள் புறநகர் மண்டலங்களான ஆர்.ஆர்.நகர், எலஹங்கா, பொம்மனஹள்ளி, மஹாதேவபுரா, தாசரஹள்ளியை சேர்ந்த சாலைகளாகும். 337 கி.மீ., தொலைவிலான சாலையில், 217 கி.மீ., தொலைவிலான சாலைகள், புறநகர் சாலைகளாகும். 160 கி.மீ., தொலைவிலான 105 சாலைகள், நகரின் மத்திய பகுதியான கிழக்கு, மேற்கு, தெற்கு மண்டலங்களை சேர்ந்த சாலைகளாகும்.
வார்டு சாலைகளின் மேம்பாட்டுக்கு அளிக்கப்படும் நிதியுதவியை விட, பிரதான சாலைகளுக்கு வழங்கும் நிதியுதவி அதிகம். மாநில அரசும் நகரின் பிரதான சாலைகளை தரம் உயர்த்த, அடிப்படை வசதிகளை மேம்படுத்த சிறப்பு நிதி வழங்கும். எனவே மாநகராட்சியின் அதிக வாகன நெரிசல் கொண்ட சாலைகளை தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.