ADDED : அக் 25, 2025 12:28 AM
புதுடில்லி:சிறுமியை கடத்திச் சென்று, திருமணம் புரிந்ததாக, நான்காண்டுகளுக்கு முன், வாலிபர் ஒருவர் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் இருந்து, அவரை டில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டது.
சிவராஜ் சிங் சுடாமா என்ற நபர், 2021ல், அப்போது, 16 வயது சிறுமியாக இருந்தவரை கடத்திச் சென்று, கட்டாய திருமணம் புரிந்ததாக, சுடாமா மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த வழக்கு, டில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிபதி லவ்லீன் முன்னிலையில் இறுதியாக விசாரிக்கப்பட்டது. நீதிபதி லவ்லீன் தன் உத்தரவில் கூறியதாவது:
அப்போது சிறுமியாகவும், இப்போது திருமணத்திற்கு தகுதியான வயதிற்கு வந்துள்ள அந்த இளம்பெண்ணிடம் நடத்திய விசாரணையில், தன் தாயிடம் கூறிய பின் தான், அந்த இளைஞருடன் சுற்றுலா சென்றதாக அந்த பெண் கூறியுள்ளார்.
அதனால், போலீசார் தெரிவித்துள்ள படி, அந்த சிறுமி, அந்த வாலிபரால் கடத்திச் செல்லப்பட்டு, கட்டாயமாக திருமணம் செய்யப்படவில்லை. அவ்வாறு சென்றதை போலீசார் நிரூபிக்கவில்லை. எனவே, இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் இருந்து, அந்த வாலிபரை விடுவித்து உத்தரவிடுகிறேன்.
இவ்வாறு நீதிபதி கூறினார்.
இதையடுத்து, நான்காண்டுகளாக நடந்து வந்த விசாரணையில் இருந்து, அந்த வாலிபர் சிவ்ராஜ் சிங் சுடாமா விடுவிக்கப்பட்டார்.

