ADDED : அக் 25, 2025 12:25 AM

புதுடில்லி: காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், டில்லியில் காற்று சுத்திகரிப்பான் மற்றும் முகக்கவசம் விற்பனையும் அதிகரித்துள்ளது.
தலைநகர் டில்லி, அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானின் சில பகுதிகளில் குளிர்காலமான அக்டோபர் முதல் ஜனவரி மாதம் வரை காற்று மாசு அதிகரிக்கிறது.
காற்று மாசை கட்டுப்படுத்த டில்லி அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. காற்று மாசை உச்சத்துக்கு சென்றதால் டில்லியில் பட்டாசு வெடிக்க ஆறு ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் இந்த ஆண்டு, அரசின் கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றம் தீபாவளிப் பண்டிகைக்கு இரண்டு நாட்கள் மட்டும் தலா மூன்று மணி நேரம் பசுமைப் பட்டாசு வெடிக்க அனுமதி அளித்தது.
இதையடுத்து, டில்லியி காற்று மாசு உச்சத்துக்கு சென் றுள்ளது. டில்லியில் நேற்று மாலை 4:00 மணிக்கு காற்றின் தரக்குறியீடு, 275 ஆக பதிவாகி இருந்தது.
இம்மாத துவக்கத்தில் இருந்தே காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், காற்று சுத்திகரிப்பான் மற்றும் முகக்கவசம் விற்பனையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இம்மாதம் மட்டும் காற்று சுத்திகரிப்பான் விற்பனை 70 சதவீதம் அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திராபுரம் 'ஏர் எஸ்பர்ட் இந்தியா' கடை உரிமையாளர் விஜேந்திர மோகன் கூறுகையில், “மாதத்துக்கு 10 காற்று சுத்திகரிப்பான் விற்பனை ஆகும். ஆனால், கடந்த மூன்று நாட்களில் 40 இயந்திரங்கள் விற்பனை ஆகியுள்ளன. மேலும், காற்று சுத்திகரிப்பான் குறித்த விசாரணைகளும் அதிகரித்துள்ளன,”என்றார்.
அதேபோல, இணையதளம் வாயிலாகவும் ஏராளமானோர் காற்று சுத்திகரிப்பான் மற்றும் முகக்கவசம் வாங்குகின்றனர்.
கன்னாட் பிளேஸ் அப்பல்லோ மருந்தக விற்பனையாளர் ராஜீவ் குமார் கூறுகையில், “இரண்டு வாரங்களில் முகக்கவசம் விற்பனை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. பெரும்பாலான மக்கள் இன்னும் வழக்கமான முகக்கவசங்களையே வாங்குகின்றனர்,”என்றார்.

