ஊழல் இல்லாத அரசை உறுதி செய்வேன்: தேஜஸ்வி வாக்குறுதி
ஊழல் இல்லாத அரசை உறுதி செய்வேன்: தேஜஸ்வி வாக்குறுதி
ADDED : அக் 24, 2025 05:57 PM

பாட்னா: 'பீஹாரை நம்பர் ஒன் மாநிலமாக மாற்றுவது எனது கனவு. ஊழல் இல்லாத அரசை உறுதி செய்வேன்' என இண்டி கூட்டணி முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்து உள்ளார்.
பாட்னாவில் நிருபர்களிடம், தேஜஸ்வி யாதவ் கூறியதாவது: எனக்கு ஒரே ஒரு கனவுதான் இருக்கிறது. பீஹாரை நம்பர் ஒன் மாநிலமாக மாற்ற வேண்டும். கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு உட்பட அனைத்து துறைகளில் சிறந்து விளங்கும், நடவடிக்கை எடுக்கும், மக்களின் குரலைக் கேட்கும் ஒரு அரசு பீஹாரில் இருக்க வேண்டும். சிகிச்சைக்கோ அல்லது வேலைக்கோ யாரும் வேறு எங்கும் செல்ல வேண்டியதில்லை.
பீஹாரில் எங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ஒரு முதல்வராக, குற்றம் எதுவும் நடக்காமல் இருப்பதை நான் உறுதி செய்வேன். ஊழல் இல்லாத அரசை உறுதி செய்வேன். ஆளும் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முதல்வர் நிதிஷ் குமார் முதல்வராக பதவியேற்க மாட்டார். பீஹாரில் ஊழல் தலைவர்கள் மற்றும் குற்றவாளிகளை மத்திய அரசு பாதுகாக்கிறது.
ஒரு பீஹாரியாக, எனது மாநிலம் ஏழ்மை நிலையில் இருப்பதும், வேலையின்மை, ஊழல் மற்றும் குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதும் எனக்கு வேதனை அளிக்கிறது. பீஹாரில் 20 ஆண்டுகள் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி இருந்தபோதிலும், மாநிலத்தின் தனிநபர் வருமானம் மிகக் குறைவு, விவசாயிகள் ஏழைகளாகவே உள்ளனர். பிரதமர் மோடியே நிதிஷ் குமார் மீது 55 வழக்குகளை கணக்கிட்டார்.
ஆனால் அவர் மீது என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? காட்டு ராஜ்ஜியம் என்பது குற்றவாளிகள் பாதுகாக்கப்பட்டு ஆதரிக்கப்படும் இடமாகும். மேலும் பீஹாரில் பாலியல் வன்கொடுமை, கொலை, ஊழல் மற்றும் பிற குற்றங்கள் நடக்காத ஒரு நாள் கூட கடக்கவில்லை. அவர்கள் குஜராத்தில் தொழிற்சாலைகளை அமைத்து பீஹாரில் வெற்றியை எதிர்பார்க்கிறார்கள். இவ்வாறு தேஜஸ்வி யாதவ் கூறினார்.

