ADDED : ஜன 06, 2024 12:01 AM
புதுடில்லி:ஜம்மு - காஷ்மீரில், 11 பயங்கரவாத தாக்குதல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதியை, ஏழு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க, டில்லி நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது.
ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த, ஜாவைத் அகமது மட்டூ, 32, டில்லி நிஜாமுதீனில் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து, திருட்டு கார் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணைக்குப் பின், டில்லி பெருநகர மாஜிஸ்திரேட் நபீலா வாலி முன், நேற்று ஆஜர்படுத்தினர். அப்போது, அவரிடம் விசாரணை நடத்த அனுமதி கேட்டு, போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதைப் பரிசீலித்த மாஜிஸ்திரேட், ஏழு நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
ஜம்மு - காஷ்மீரில் ஐந்து கையெறி குண்டு தாக்குதல்கள் மற்றும் தனித்தனி சம்பவங்களில், குறைந்தது ஐந்து காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டது உட்பட, 11 பயங்கரவாதச் செயல்களில் தொடர்புடைய மட்டூ குறித்து தகவல் தெரிவிப்போருக்கு, 10 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஹிஸ்புல் முஜாகிதீன் மற்றும் அல் பதர் ஆகிய பயங்கரவாத அமைப்புகளின் உறுப்பினரான மட்டூ நடத்திய தாக்குதல்களில், ஏராளமான போலீசாரும் காயம் அடைந்துஉள்ளனர்.