ADDED : ஆக 07, 2025 11:18 PM
சுல்தான்பூர்:டில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தன் பாஸ்போர்டை புதுப்பித்து கொள்ள, உ.பி., மாநில சிறப்பு எம்.பி., - எம்.எல்.ஏ., கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. எனினும், வெளிநாடு செல்லும் போது, கோர்ட்டுக்கு தெரிவிக்க, கெஜ்ரிவால் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
கடந்த, 2014 லோக்சபா தேர்தலின் போது, உ.பி.,யின் அமேதி மாவட்டத்தில் உள்ள கவுரிகஞ்ச் மற்றும் முசாபிர்கானா பகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக, டில்லியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது தேர்தல் கமிஷன் வழக்கு தொடர்ந்தது.
அதையடுத்து, அவரின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. அந்த வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து, உச்ச நீதிமன்றம் தலையீட்டின் படி விலக்கு பெற்றுள்ள கெஜ்ரிவால், தன் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க அனுமதி கோரி, சுல்தான்பூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
உ.பி.,யின் சுல்தான்பூர் நகர சிறப்பு எம்.பி., - எம்.எல்.ஏ., கோர்ட்டில் இதற்கான மனுவை, கெஜ்ரிவாலின் வழக்கறிஞர் மதன் சிங் தாக்கல் செய்திருந்தார். நேற்று, அவரின் பாஸ்போர்டை புதுப்பித்துக் கொள்ள, இந்த சிறப்பு கோர்ட் அனுமதி வழங்கியது.
எனினும், வெளிநாடுகள் செல்லும் முன், நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது.