'ஆன்லைன்' சூதாட்ட வழக்கு மாநிலங்களுக்கு கோர்ட் நோட்டீஸ்
'ஆன்லைன்' சூதாட்ட வழக்கு மாநிலங்களுக்கு கோர்ட் நோட்டீஸ்
ADDED : ஆக 02, 2025 06:59 AM
'ஆன்லைன்' சூதாட்டங்களுக்கு தடை விதிக்க கோரிய பொதுநல மனு மீது பதிலளிக்கும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப் பித்துள்ளது.
'ஆன்லைன்' சூதாட்டம் காரணமாக இளைஞர்களின் வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது. எனவே இவற்றுக்கு தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.கே.பால், ''இத்தகைய சூதாட்ட செயலிகள் காரணமாக இந்தியாவில் உள்ள 30 கோடி இளைஞர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்படுகின்றனர்.
நாளுக்கு நாள் இந்த சூதாட்ட செயல்களால் தற்கொலைகளும் அதிகரித்து வருகின்றன. இத்தகைய சூதாட்ட செயலி விளம்பரங்களை ஊடகங்களில் வெளியிடக்கூடாது; அதில் நடிக்க பிரபலங்களுக்கு தடை விதிக்க வேண்டும்,'' என, வாதிட்டார்.
இதை தொடர்ந்து, 'இந்த மனு மீது மாநில அரசுகள் மற்றும் சூதாட்ட செயலி நிறுவனங்கள் பதில் அளிக்க வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
-டில்லி சிறப்பு நிருபர்-