தேர்தல் கமிஷன் குறித்து காங்., ராகுல் பேசுவதை... புறக்கணிக்கிறோம்!; ஓட்டு திருடுவதாக கூறியதற்கு ஆணையம் விளக்கம்
தேர்தல் கமிஷன் குறித்து காங்., ராகுல் பேசுவதை... புறக்கணிக்கிறோம்!; ஓட்டு திருடுவதாக கூறியதற்கு ஆணையம் விளக்கம்
ADDED : ஆக 02, 2025 07:01 AM

பாட்னா : 'வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி விவகாரத்தில் கருத்து தெரிவிக்கும் காங்கிரஸ் எம்.பி., ராகுல், தேர்தல் கமிஷன் பற்றி காட்டுமிராண்டித்தனமாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார். எங்கள் ஊழியர்களை மிரட்டும் வகையில் பேசி வருகிறார். இது வருந்தத்தக்கது. இது போன்ற பொறுப்பற்ற பேச்சுகளை முற்றிலும் புறக்கணிக்கிறோம்' என, தலைமை தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, வரும் அக்டோபரில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், காங்., - ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே, கடந்த ஒரு மாதமாக, வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடந்தது.
நீக்கம் இதன்படி, வீடு வீடாகச் சென்று வாக்காளர்களின் அடையாளங்களை தேர்தல் கமிஷன் ஊழியர்கள் சரிபார்த்தனர். அப்போது, ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில், 7 லட்சம் வாக்காளர்கள் பதிவு செய்ததும், 30 லட்சம் பேர் மற்ற மாநிலங்களுக்கு குடியேறி அங்கு வாக்காளர்களாக பதிவு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக, வரைவு வாக்காளர் பட்டியலில், 65 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற மாட்டார்கள் என, தெரிகிறது.
இந்நிலையில் திட் டமிட்டபடி, பீஹாரில் வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியானது. சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு முன், பீஹாரில், 7.93 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலில் எத்தனை லட்சம் பேர் விடுபட்டனர் என்ற தகவல்கள் வெளியாகவில்லை.
எனினும், தேர்தல் கமிஷன் இணையதளத்துக்கு சென்று, வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவிட்டு, வரைவு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இருக்கிறதா என்பதை வாக்காளர்கள் தெரிந்து கொள்ளலாம். பட்டியலில் விடுபட்ட தகுதிவாய்ந்த வாக்காளர்கள், மாவட்ட தேர்தல் பதிவு அதிகாரியிடம் உரிய ஆவணங்களுடன், செப்., 1 வரை விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
'இந்தாண்டு இறுதியிலும், அடுத்த ஆண்டும் தேர்தல் நடக்கவுள்ள தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களிலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடக்கும்' என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
மறுப்பு 'பீஹார் சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற தேர்தல் கமிஷன் ஓட்டு திருட்டில் ஈடுபடுகிறது' என, சமீபத்தில், காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் குற்றஞ்சாட்டி இருந்தார்.
இதற்கு தேர்தல் கமிஷன் நேற்று அளித்த விளக்கம்:
வாக்காளர் பட்டியலில் உள்ள பிரச்னை தொடர்பாக விவாதிக்க வரும்படி, கடந்த ஜூனில் இரு முறை ராகுலுக்கு இ - மெயில் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் வரவும் இல்லை; பதிலும் அளிக்கவில்லை. தேர்தல் கமிஷன் பற்றி காட்டுமிராண்டித்தனமாக கருத்துக்களை தெரிவித்து வரும் அவர், தற்போது அதன் ஊழியர்களை மிரட்டும் வகையில் பேசி வருகிறார்.
இது வருந்தத்தக்கது. இது போன்ற பொறுப்பற்ற பேச்சுகளை தேர்தல் கமிஷன் முற்றிலும் புறக்கணிக்கிறது. நாங்கள் நியாயமாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் பணியாற்றி வருகிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.