வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டோர் விபரங்களை காட்சிப்படுத்த கோர்ட் உத்தரவு
வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டோர் விபரங்களை காட்சிப்படுத்த கோர்ட் உத்தரவு
ADDED : ஜன 20, 2026 07:10 AM

புதுடில்லி: 'மேற்கு வங்கத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியின்போது தர்க்கரீதியான முரண்பாடுகள் உள்ளதாக கூறி பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் ஒவ்வொரு தாலுகா, கிராம, பஞ்சாயத்து, வட்டார மற்றும் வார்டு அலுவலகங்களில் காட்சிப்படுத்த வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணமுல் காங்கிரஸ் அரசின் எதிர்ப்புக்கு மத்தியில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது.
இந்த பணியின் போது, தர்க்கரீதியான முரண்பாடுகள் உள்ளதாக கூறி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர் விபரங்கள் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
அதில், ஆவணங்கள் சரிபார்ப்புக்காக 2 கோடி பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதும் சுட்டிக்காட்டப்பட்டது. இதை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு குறித்துக் கொண்டது.
இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவு:
தேர்தல் கமிஷன் நோட்டீஸ் பிறப்பித்த வாக்காளர்களில், வரையறுக்கப்பட்டவை, வரையறுக்கப்படாதவை மற்றும் தர்க்கரீதியான முரண்பாடு என, மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளனர். இதில், தர்க்கரீதியான முரண்பாடு இருப்பதாக கூறி நீக்கப்பட்டவர்கள் 1.25 கோடி பேர்.
பதிவு செய்யப்பட்ட ஆவணங்களில் தந்தை பெயர் பொருந்தாதது, பெற்றோர் வயது பொருத்தம் இல்லாதது மற்றும் தாத்தா - பாட்டியின் வயதில் வேறுபாடுகள் போன்ற சிக்கல்கள் இருப்பதாக இப்பிரிவு காட்டுகிறது.
எனவே, தர்க்கரீதியான முரண்பாடுகள் இருப்பதாக கூறி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டோர் பெயர் விபரங்களை, மேற்கு வங்கத்தில் உள்ள ஒவ்வொரு தாலுகா, கிராம பஞ்சாயத்து, வட்டார மற்றும் வார்டு அலுவலகங்களில் காட்சிப்படுத்த வேண்டும்.
சம்பந்தப்பட்ட வாக்காளர் அடுத்த 10 நாள்களுக்குள் ஆட்சேபனை மனு தாக்கல் செய்யலாம். நீட்டிக்கப்பட்ட காலத்திற்குள் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
அந்த ஆவணங்கள் திருப்திகரமாக இல்லாதபட்சத்தில், சம்பந்தப்பட்ட வாக்காளர் கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

