சிறை கைதிகளுக்கு ஓட்டுரிமை தேர்தல் கமிஷனுக்கு கோர்ட் உத்தரவு
சிறை கைதிகளுக்கு ஓட்டுரிமை தேர்தல் கமிஷனுக்கு கோர்ட் உத்தரவு
ADDED : அக் 11, 2025 07:29 AM

சிறையில் உள்ள கைதிகளும் தேர்தலில் ஓட்டளிக்க வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் சட்டவிதிகளில் மாற்றம் செய்யக்கோரிய பொதுநல மனு மீது பதில் அளிக்கும்படி மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
சுனிதா சர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொது நலமனுவில், 'நாடு முழுதும் உள்ள சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு ஓட்டளிக்கும் உரிமை மறுக்கப்படுகிறது.
அவர்களும் ஓட்டளிக்க ஏதுவாக சட்ட விதிகளில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்' என கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் முன் வாதம்:
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் கைதிகள் ஓட்டளிப்பதை தடுப்பது தன்னிச்சையான முடிவு. எந்த ஒரு குற்றத்திற்கும் இதுவரை தண்டனை பெறாத கைதிகள் ஓட்டளிக்க கூடாது என தடை செய்வதும் தன்னிச்சையான முடிவு.
குற்ற வழக்குகளில் கடுமையான தண்டனை பெறாதவர்கள் கூட தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் சிறையில் இருப்பவர்கள் ஓட்டளிக்கக் கூடாது என கூறுவது ஏற்புடையது அல்ல.
எனவே, மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளோர், முதியோர் இல்லங்களில் உள்ளோர் ஓட்டளிக்க தேர்தல் ஆணையம் வகுத்துள்ள வழிமுறைகளை சிறை கைதிகளுக்கும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
இந்த வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனு மீது பதில் அளிக்குமாறு மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் பிறப்பித்து வழக்கை ஒத்தி வைத்தனர்.
- டில்லி சிறப்பு நிருபர் -