ADDED : ஜன 28, 2025 02:24 AM
புதுடில்லி, ஜன. 28-
நாடு முழுதும், பாம்பு கடியால் பாதிக்கப்படும் நபர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சைலேந்திர மணி திரிபாதி என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், 'நம் நாட்டில் தான் ஆண்டுதோறும் 58,000 பேர் பாம்பு கடியால் உயிரிழந்து வருகின்றனர். விஷ முறிவு மருந்துகள் கிடைப்பதில் நிலவும் தட்டுப்பாடே இதற்கு காரணம்.
'எனவே அரசு மருத்துவமனைகளில் பாம்பு கடிக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய பயிற்சி பெற்ற டாக்டர்கள், உரிய விஷ முறிவு மருந்துகள் இருப்பதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது பதில் மனுக்களை ஆய்வுசெய்த பின் நீதிபதிகள் கூறுகையில், 'பாம்பு கடி பிரச்னைக்கு மத்திய - மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
'மாநில அரசுகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசித்தபின், பாம்பு கடியால் பாதிக்கப்படும் நபர்களுக்கு தேவையான விஷ முறிவு மருந்துகள் மற்றும் உரிய சிகிச்சைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்' என, அறிவுறுத்தினர்.
இதுதொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்க கோரி, மாநில அரசுகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் முறையிட்டனர்.
இதன்படி, ஆறு வாரங்களுக்குள் பதில் மனுக்கள் தாக்கல் செய்ய, நீதிபதிகள் அவகாசம் அளித்து வழக்கை ஒத்திவைத்தனர்.

