கிரெடிட் கார்டு பில் தாமதத்துக்கான வட்டி உச்ச வரம்பை நீக்கியது கோர்ட்
கிரெடிட் கார்டு பில் தாமதத்துக்கான வட்டி உச்ச வரம்பை நீக்கியது கோர்ட்
ADDED : டிச 21, 2024 11:54 PM

புதுடில்லி: 'கிரெடிட் கார்டு' எனப்படும் கடன் அட்டை பில் தாமதமாக செலுத்தினால் விதிக்கப்படும் வட்டிக்கு நிர்ணயிக்கப்பட்ட உச்ச வரம்பை நீக்கி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கிரெடிட் கார்டு பயன்படுத்துவோர், அதற்கான பில்லை குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்த வேண்டும். அந்த தேதியைத் தாண்டி தாமதமாக செலுத்தினால், அல்லது முழு தொகையை செலுத்தாவிட்டால், செலுத்தாத தொகைக்கு வட்டி விதிக்கப்படும்.
வழக்கு விசாரணை
இவ்வாறு, பில் தாமதத்துக்கான வட்டி தொடர்பான வழக்கை விசாரித்த தேசிய நுகர்வோர் குறைதீர் கமிஷன், 2008ல் அளித்த உத்தரவில், இந்த வட்டிக்கான உச்ச வரம்பை 30 சதவீதமாக நிர்ணயித்தது.
இதை எதிர்த்து, கிரெடிட் கார்டுகள் வழங்கும் பல்வேறு வங்கிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் பீலா திரிவேதி, சதீஷ் சந்திர சர்மா அடங்கிய அமர்வு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது.
வழக்கு விசாரணையின்போது வங்கிகள் சார்பில் வாதிடப்பட்டதாவது:
வாடிக்கையாளர்களுக்கு 45 நாட்களுக்கு வட்டி வசூலிக்கப்படுவதில்லை.
இந்த காலத்துக்குப் பின், செலுத்தாத தொகைக்கு மட்டுமே வட்டி விதிக்கப்படுக்கிறது. கிரெடிட் கார்டு வர்த்தகம் தொடர்பான செலவீனங்கள் அதிகரித்துள்ளன.
இவற்றின் அடிப்படையிலேயே வட்டி விகிதங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. முறையாக அல்லது முழுமையாக செலுத்தாதவர்களுக்கு மட்டுமே வட்டி விதிக்கப்படுகிறது.
தனிப்பட்டவரின் பரிவர்த்தனை செயல்பாடுகள் உள்ளிட்டவையும் கருத்தில் கொள்ளப்படுகிறது. தாமதமாக செலுத்துவது அல்லது பகுதியாக செலுத்துவதை தவிர்க்கவே வட்டி விதிக்கப்படுகிறது.
மேலும், வங்கிகள் விதிக்கும் கட்டணங்களுக்கு, தேசிய நுகர்வோர் குறைதீர் கமிஷன் உச்ச வரம்பை நிர்ணயிக்க முடியாது. வங்கிகள் அனைத்தும், ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் வருவதால், ரிசர்வ் வங்கியே உச்ச வரம்பை நிர்ணயிக்க முடியும்.
இவ்வாறு வங்கிகள் சார்பில் வாதிடப்பட்டது.
இதை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு, தன் உத்தரவில் கூறியதாவது:
வட்டி விகிதத்துக்கு உச்ச வரம்பு நிர்ணயிக்கும் அதிகாரம் தேசிய நுகர்வோர் குறைதீர் கமிஷனுக்கு இல்லை.
இது தொடர்பாக, ரிசர்வ் வங்கியே உரிய முடிவுகளை எடுக்க முடியும். அதனால், உச்ச வரம்பு நிர்ணயித்து, 2008ல் தேசிய நுகர்வோர் குறைதீர் கமிஷன் பிறப்பித்த உத்தரவு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
அதிகாரம் இல்லை
இதற்கிடையே, ரிசர்வ் வங்கி சார்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தாமதமாக செலுத்தப்படும் தொகை அல்லது பகுதியாக செலுத்தப்படாத தொகைக்கு அதிக வட்டி விதிக்கக் கூடாது என, வங்கிகளுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன.
வங்கிகள் கட்டுப்பாடு சட்டத்தின்படி, எவ்வளவு வட்டி விதிக்க வேண்டும் என வங்கிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் அதிகாரம் ரிசர்வ் வங்கிக்கு இல்லை.
வட்டி விகிதம் தொடர்பாக, அந்தந்த வங்கிகளின் இயக்குனர்கள் குழுவே முடிவு செய்கின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.