எடுத்து வந்தவரை கைது செய்த அதிகாரிகளுக்கு கோர்ட் கண்டிப்பு
எடுத்து வந்தவரை கைது செய்த அதிகாரிகளுக்கு கோர்ட் கண்டிப்பு
ADDED : அக் 19, 2025 12:43 AM
புதுடில்லி: 'சர்வதேச விமான நிலையங்களில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அமைப்புகள், சர்வதேச பயணியை கைது செய்வதற்கு முன், நடைமுறையில் உள்ள சட்டங்கள் குறித்து தங்கள் அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்' என, உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
நம் நாட்டைச் சேர்ந்த ராக்கி ஆபிரகாம் என்பவர், ஐரோப்பிய நாடான இத்தாலியில், 20 ஆண்டுகளாக வசித்து வருகிறார். வெளிநாடுவாழ் இந்தியரான இவர், கடந்த ஜனவரியில் டில்லிக்கு வந்தார்.
உடைமைகளை சோதித்த விமான நிலைய அதிகாரிகள், மான் கொம்புகளை எடுத்து வந்ததாக அவரை கைது செய்தனர். சமீபத்தில் அவருக்கு ஜாமின் வழங்கிய டில்லி நீதிமன்றம், நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என நிபந்தனை விதித்தது.
இதை எதிர்த்து, ராக்கி ஆபிரகாம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:
மரபணு சோதனையில், ராக்கி ஆபிரகாமிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது கலைமான் கொம்பு என்பது உறுதியாகி உள்ளது. இது, நம் நாட்டின் காடுகள் அல்லது வனவிலங்கு தொடர்பான எந்தவொரு சட்ட விதிகளையும் மீறவில்லை.
சர்வதேச விமான நிலையங்களில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அமைப்புகள், ஒரு சர்வதேச பயணியை தடுத்து நிறுத்துவது, கைது செய்வது போன்ற கடும் நடவடிக்கையை எடுப்பதற்கு முன், நடைமுறையில் உள்ள சட்டங்கள் குறித்து தங்கள் அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இது உடனடி தேவை.
இத்தகைய நடவடிக்கை அவசரமாக எடுக்கப்படக் கூடாது. பொருத்தமான சட்ட ஆலோசனைக்குப் பிறகே எடுக்கப்பட வேண்டும். அதிகாரிகளின் இத்தகைய முறையற்ற நடவடிக்கைகளால், சர்வதேச அளவில் நம் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுகிறது.
மேலும், அவர்களின் செயல்பாடு மனித உரிமைககளை மீறுவதாகவும் உள்ளது. எனவே, ராக்கி ஆபிரகாமுக்கு எதிரான கைது நடவடிக்கை மற்றும் முதல் தகவலறிக்கைகளை சட்டவிரோதமானது என அறிவித்து ரத்து செய்கிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.