மாட்டுக் கொழுப்பு விவகாரம்: சந்திரபாபு சொல்வது பொய்; சத்தியம் செய்கிறார் ஜெகன்மோகன்!
மாட்டுக் கொழுப்பு விவகாரம்: சந்திரபாபு சொல்வது பொய்; சத்தியம் செய்கிறார் ஜெகன்மோகன்!
ADDED : செப் 20, 2024 04:30 PM

விஜயவாடா: '' தனது ஆட்சியில் ஏற்பட்ட தோல்விகளை மறைக்கவே முதல்வர் சந்திரபாபு நாயுடு, லட்டுவில் மாமிச கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டது என்று கட்டுக்கதையை கட்டவிழ்த்துவிட்டுள்ளார்,'' என முன்னாள் முதல்வரும், ஓய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார்.
திசைதிருப்பல்
இது தொடர்பாக நிருபர்களிடம் கூறியதாவது: சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு வந்தது முதல் விவசாயிகள் பலரும் வீதிக்கு வந்துள்ளனர். தர்மத்துக்கு எதிரான செயல்பாடுகள் தற்போதைய ஆட்சியில் அதிகரித்துள்ளது. பொய் வழக்குகளை போடுவதையே முதன்மையானதாக கொண்டுள்ளார் சந்திரபாபு நாயுடு. அவரின் குற்றச்சாட்டை மறுக்கிறேன்; அவர் அனைத்து விசயங்களையும் திசை திருப்புகிறார். ஆந்திராவில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து உள்ளதை திசை திருப்பவே எங்கள் மீது குற்றச்சாட்டு.
மோசமான அரசியல்
மோசமான பிரசாரங்களில் ஈடுபட்டு ஆட்சிக்கு வந்தார். அனைத்து துறைகளும் மோசமாக செயல்படுகின்றன. நிர்வாக திறன் இல்லாததால் செயற்கையாக
உருவாக்கப்பட்ட வெள்ளம் வந்தது. இதனால், பலர் உயிரிழந்தனர். எனது ஆட்சியில் வீடு தேடி வந்த ரேசன் பொருட்களை தற்போது நிறுத்திவிட்டனர். சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாக குறைபாட்டை மறைக்க திசைதிருப்பும் முயற்சியில் அவர் ஈடுபடுகிறார்.
மோசமான அரசியலுக்கு கடவுளின் பெயரால் அரசியல் செய்கிறார். கடவுளை கூட அரசியலுக்கு இழுத்து வந்து திசைதிருப்பும் வல்லமை பெற்றவர் அவர். அவர் கூறும் அனைத்துமே கட்டுக்கதை. எனது ஆட்சிகாலத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. மக்களை திசைதிருப்பவே கட்டுக்கதைகளை கட்டவிழ்த்துவிடுகிறார். இப்படியெல்லாம் பொய் சொல்வது தர்மமா?
கட்டுக்கதை
ஒவ்வொரு 6 மாதமும் நெய் வாங்குவதற்கு ஆன்லைனில் டெண்டர் விடுவது வழக்கம். இதில், தரம் பார்த்து வாங்குவதில் நாங்கள் எதையும் மாற்றவில்லை. லட்டுக்கான நெய் விநியோகத்தில் வழக்கமாக பின்பற்றப்படும் நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது. ஒவ்வொரு டேங்கரில் வரும் நெய்யும் என்ஏபிஎல் சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும். சான்றிதழ் பெற்றாலும் 3 வித சோதனையில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே உரிய பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படும். இத்தனை சோதனைக்கு பிறகும் அனுமதிக்கப்படும் நெய்யில் கலப்படம் என்பது கட்டுக்கதை இல்லையா
மவுனம் ஏன்
தேவஸ்தானத்தில் முந்தைய சந்திரபாபு ஆட்சி காலத்தில் 15 முறை தரமற்ற நெய் நிராகரிக்கப்பட்டது. எனது ஆட்சிக்காலத்தில் 18 முறை நிராகரிக்கப்பட்டது.
அவர் தனது கற்பனையை இறக்கை கட்டி பறக்க விடலாமா? ஜூலை 12ல் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்ட தினத்தில் சந்திரபாபு தான் முதல்வராக இருந்தார். பரிசோதனை செய்த இத்தனை நாட்கள் அவர் மவுனம் காத்தது ஏன்? இவ்வாறு ஜெகன்மோகன் ரெட்டி கூறினார்.