கால்வாயில் தாய் - மகள் மரணம்
ராய்ச்சூர் அருகே பி.யத்லாபுரா கிராமத்தை சேர்ந்தவர் சுஜாதா, 27. இவரது மகள் ஷ்ரவாணி, 10. நேற்று மதியம் கிராமத்தில் ஓடும், துங்கபத்ரா கால்வாயில் தாய், மகள் துணி துவைத்தனர். எதிர்பாராதவிதமாக கால்வாயில் தவறி விழுந்த ஷ்ரவாணி, தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். மகளை காப்பாற்ற தாய் கால்வாயில் குதித்தார். நீச்சல் தெரியாமல், தண்ணீரில் மூழ்கி இறந்தார். அவரது உடல் மீட்கப்பட்டது. மகள் உடல் தேடப்படுகிறது.
மின்சாரம் தாக்கி லைன்மேன் பலி
தாவணகெரேயை சேர்ந்தவர் முத்துராஜ், 32. பெஸ்காமில் லைன்மேனாக இருந்தார். நேற்று மதியம், மலல்கெரே கிராமத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டது. அதை சரி செய்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அதிகாரிகள் அலட்சியத்தால் முத்துராஜ் இறந்ததாக குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர். ஹராடி போலீசார் விசாரிக்கின்றனர்.
விபத்தில் இருவர் உயிரிழப்பு
ராய்ச்சூர் ரூரல் ஒய்.டி.பி.எஸ்., அனல் மின் நிலையம் அருகில் நேற்று மதியம் பைக் மீது, டிப்பர் லாரி மோதியது. பைக்கில் சென்ற ஜனார்த்தன், 27 என்பவர் துாக்கி வீசப்பட்டு இறந்தார். இதுபோல தார்வாட் கலகட்டகியில் சாலையை கடக்க முயன்ற போது, லாரி மோதியதில் சுபாஷ், 25, என்பவர் உடல் சிதறி இறந்தார்.
தந்தையை கொன்ற மகன் கைது
கேரளாவின் எரிமேலியை சேர்ந்தவர் வேலாயுதன், 76. கடந்த சில ஆண்டுகளாக குடும்பத்தினருடன், பெங்களூரு பன்னர்கட்டாவில் வசித்தார். நேற்று முன்தினம் இரவு வேலாயுதனுக்கும், அவரது மகன் வினோத்குமார், 40 என்பவருக்கும், ஏதோ காரணத்திற்காக வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த மகன், தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்தார். பன்னர்கட்டா போலீசார் கைது செய்தனர்.
வாலிபரை கொன்ற நண்பர்
கலபுரகி ஆலந்தை சேர்ந்தவர் சிவகுமார் சூரியகாந்த், 21. நேற்று முன்தினம் இரவு நண்பர் பிருத்விராஜ், 22 என்பவரின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்டார். குடிபோதையில் சிவகுமாருக்கும், இன்னொரு நண்பர் மல்லிகார்ஜுன் காம்ப்ளே என்பவருக்கும் சண்டை ஏற்பட்டது. சிவகுமாரை கல்லால் தாக்கி காம்ப்ளே கொலை செய்தார். அவர் கைது செய்யப்பட்டார்.
விபத்தில் சிறுவன் பலியான சிறுவன்
பெங்களூரு கே.ஜி.ஹள்ளியில் வசிக்கும் தம்பதி மகன் தாஹிர் பாஷா, 5. தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்தார். நேற்று முன்தினம் மாலை வீட்டின் முன்பு, விளையாடி கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக, வீட்டின் முன்பு நின்ற ஸ்கூட்டரில் மோதி கீழே விழுந்தார். அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவின் சக்கரம், தாஹிர் பாஷா மீது ஏறி, இறங்கியது. சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர் பரிதாபமாக இறந்தார்.