டிரைவர் உடல் மீட்பு
சிக்கபல்லாப்பூர் நந்திமலையின் 38வது வளைவில், நேற்று வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது அழுகிய நிலையில், உடலை பார்த்தனர். போலீசார் அங்கு வந்து சோதனை நடத்தி, இறந்து கிடந்தவரின் பேன்ட் பாக்கெட்டில் இருந்த, ஆதார் அட்டையை எடுத்து பார்த்தபோது, நாராயணசாமி என்று தெரிந்தது. உடல் அருகே விஷ பாட்டில் கிடந்ததால், விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
சிக்கபல்லாப்பூர் ஜட்வாரா ஒசஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த நாராயணசாமி, 37, லாரி டிரைவர். கடந்த மாதம் 15ம் தேதி திருப்பதிக்குச் செல்வதாக வீட்டில் கூறிவிட்டுச் சென்றுள்ளார். அதன்பின்னர் அவர் திரும்பி வரவில்லை.
லாரிகள் மோதி விபத்து
சிக்கபல்லாப்பூர் சித்லகட்டா ரூரல் பகுதியில், நேற்று மாலை இரண்டு லாரிகளின் டிரைவர்கள், போட்டி போட்டு லாரிகளை ஓட்டிச் சென்றனர். அப்போது டிரைவர்களின் கட்டுப்பாட்டை இழந்த லாரிகள், சாலை தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தன. டிரைவர்கள் இருவரும் படுகாயத்துடன், மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை
தட்சிண கன்னடா புத்துார் கடபாவை சேர்ந்தவர் ஷாகிர், 24. நேற்று முன்தினம் இரவு கடபா பகுதியில் நடந்த, கம்பாலா போட்டியை பார்க்க சென்றார். அங்கு வந்திருந்த வேறு மதத்தை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு, பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில், ஷாகிர் கைது செய்யப்பட்டார்.
அரிசி பதுக்கிய பா.ஜ., பிரமுகர்
கலபுரகியை சேர்ந்தவர் ராஜு ரத்தோட், 35. பா.ஜ., பிரமுகர். இவருக்கு சொந்தமான அரிசி ஆலை, யாத்கிர் ஷகாபூரில் உள்ளது. அன்னபாக்யா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசியை, குறைந்த விலைக்கு வாங்கி, அரிசி ஆலையில் பதுக்கிவைத்து, பாலிஷ் போட்டு, அதிக விலைக்கு ராஜு விற்று உள்ளார். இதுபற்றி அறிந்த சுர்பூர் போலீசார், நேற்று முன்தினம் இரவு, ராஜு ரத்தோட்டை கைது செய்தனர்.
விபத்தில் இருவர் பலி
பெங்களூரு ஜே.பி., நகரில் வசித்தவர் அருண், 28. மஹாதேவபுராவில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்தார், நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும், பைக்கில் வீட்டிற்கு சென்றார். குமாரசாமி லே - அவுட்டை இணைக்கும், பன்னரகட்டா சாலையில் சென்றபோது, அந்த வழியாக வந்த டிப்பர் லாரி, பைக் மீது மோதியது. படுகாயம் அடைந்த, அருண் இறந்தார்.
l பீஹாரை சேர்ந்தவர் சுஜித் ஷா, 32. பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் தங்கி இருந்து, கூலி வேலை செய்தார். நேற்று முன்தினம் இரவு சிக்கநாகமங்களா சாலையில், பைக்கில் சென்றார். அந்த வழியாக வந்த, லாரி மோதியதில் இறந்தார்.
கார் டயரில் சிக்கி தெருநாய் சாவு
பெங்களூரு சாந்தாலாநகர் யூனிட்டி பில்டிங்கில் உள்ள, கார் பார்க்கிங்கில் தெருநாய் படுத்திருந்தது. அப்போது அந்த வழியாக வந்த காரின், முன்பக்க சக்கரம் நாய் மீது ஏறி, இறங்கியது. பலத்த காயம் அடைந்த நாய் இறந்தது. இது தொடர்பான வீடியோ, சமூக வலை தளங்களில் வெளியாகி உள்ளது. காரின் பதிவெண்ணை வைத்து, காரை ஓட்டியவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
டிரைவரை கொல்ல முயற்சி
பெங்களூரு லக்கரேயில் வசிப்பவர் மாருதி, 30. வாடகை கார் டிரைவர். இவர் தனக்கு தெரிந்த கெஞ்சா என்பவருக்கு 25,000 ரூபாய் கடன் கொடுத்திருந்தார். ஆனால் கடனை திரும்ப தராமல், கெஞ்சா இழுத்தடித்து உள்ளார்.
இதனால் மாருதி, கெஞ்சா இடையில் தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் மாருதியை, துமகூரின் ஹெப்பூருக்கு வரவழைத்து, கெஞ்சாவும், அவரது நண்பர்களும் ஆயுதங்களால் தாக்கிக் கொல்ல முயன்றனர். அவர்களிடம் இருந்து தப்பித்து வந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.