மாடு முட்டி மாணவர் பலி
தாவணகெரேயின் நியாமதியை சேர்ந்தவர் புனித், 19. ஷிவமொகா ஷிகாரிபுராவில் தனியார் கல்லுாரியில் படித்தார். நேற்று முன்தினம் மாலை ஷிகாரிபுரா அருகே கல்மனே கிராமத்தில், மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது. இதை பார்க்க, புனித் சென்றார். போட்டியில் பங்கேற்க ஒரு மாடு, புனித்தை கொம்பால் முட்டி தள்ளியது. வயிற்றில் பலத்த காயம் அடைந்தவர் பரிதாபமாக இறந்தார்.
பள்ளி மாணவி தற்கொலை
தட்சிண கன்னடா பெல்தங்கடி பிஜடுக்கா கிராமத்தில் வசிக்கும், கிஷோர் - சவுமியா தம்பதியின் மகள் திரிஷா, 16. தனியார் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்தார். திரிஷா நல்லவர் இல்லை. அவருடன் சேர வேண்டாம் என்று, அவருடன் படிக்கும் தோழி ஒருவருக்கு, பள்ளி ஆசிரியர் ரூபேஷ், 28 என்பவர், குறுந்தகவல் அனுப்பி உள்ளார். இதுபற்றி அறிந்த திரிஷா நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். பெல்தங்கடி போலீசார் விசாரித்து, ரூபேஷை கைது செய்தனர்.
வாலிபர் மீது தாக்குதல்
கதக் பெட்டகேரி ஹுயிலாகோலா சாலையில் வசிப்பவர் தேஜஸ், 20. இவரது தங்கையை, வேறு மத வாலிபர் ஒருவர் பின் தொடர்ந்து சென்று, கேலி, கிண்டல் செய்து உள்ளார். இதுபற்றி அறிந்த தேஜஸ், அந்த வாலிபரை தட்டிக்கேட்டு உள்ளார். இதனால் வாலிபரும், அவரது நண்பர்கள் 10 பேரும் சேர்ந்து, தேஜசை இரும்புக் கம்பியால் கொடூரமாக தாக்கி உள்ளனர். படுகாயம் அடைந்தவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். விசாரணை நடக்கிறது.

