கிரைம் கார்னர்
விபத்தில் வாலிபர் பலி
பெங்களூரு ரூரல் டப்சிஹள்ளி கிராமத்தில் நேற்று காலை சாலையோரம் நின்ற லாரி மீது, பைக் மோதியது. இந்த விபத்தில் பைக்கை ஓட்டி சென்ற, கவுரிபிதனுாரின் தேஜு, 29 இறந்தார்.
போலீசை தாக்கிய பெண்கள்
பீஹாரை சேர்ந்தவர் பல்லவி பிரியா, 29, ஜார்க்கண்டின் பிரியாராய், 26. இவர்கள் இருவரும் பெங்களூரில் ஐ.டி., நிறுவனத்தில் வேலை செய்கின்றனர். வார விடுமுறையை கொண்டாட, நேற்று முன்தினம் உத்தர கன்னடா கோகர்ணா சென்றனர். அங்கு போதைப் பொருட்கள் உட்கொண்டுவிட்டு, சாலையில் நின்று தகராறு செய்தனர். அவர்களை பிடிக்க சென்ற போலீசாரை தாக்கினர். இருவரும் கைது செய்யப்பட்டனர்.
வாலிபர் அடித்து கொலை
பெலகாவி ஹுக்கேரி கேசரூரா கிராமத்தில் வசித்தவர் நிங்கப்பா, 25. இவர் நேற்று முன்தினம் இரவு நண்பர்களான யல்லப்பா, மகேஷ் ஆகியோருடன் சேர்ந்து மது குடித்தார். குடிபோதையில் ஏற்பட்ட தகராறில், நிங்கப்பாவை கல்லால் தாக்கி, நண்பர்கள் இருவரும் கொலை செய்தனர். தலைமறைவான அவர்களை போலீசார் தேடுகின்றனர்.
மனைவியை கொன்ற கணவர்
விஜயபுரா குப்பனுார் தாண்டாவில் வசிப்பவர் அசோக் ரத்தோட், 33. இவரது மனைவி ரேஷ்மா, 25. தம்பதிக்கு மூன்று பிள்ளைகள். மனைவி நடத்தையில் கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. நேற்று காலை ஏற்பட்ட தகராறில், ரேஷ்மாவை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொன்றுவிட்டு, அசோக் தலைமறைவாகி விட்டார்.
மனைவி மீது கணவர் புகார்
ஷிவமொகாவின் தீர்த்தஹள்ளியைச் சேர்ந்தவர் சங்கீத், 27. ஷிவமொகாவில் கனரா வங்கியில் வேலை செய்தார். அங்கு அடிக்கடி வந்த வாடிக்கையாளரான 25 வயது இளம்பெண்ணுடன், பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், இருவரும் திருமணம் செய்தனர்.
இரண்டு மாதம் மட்டுமே, சங்கீத்துடன் குடும்பம் நடத்திய மனைவி, தாய் வீட்டிற்கு சென்று விட்டார். அதன்பின்னர் கணவர் வீட்டிற்கு வர மறுக்கிறார்.
வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக கணவர் மீது புகார் அளித்தார். இதை மறுத்துள்ள கணவர், மனைவி மீது போலீசில் புகார் அளித்து உள்ளார். திருமணம் என்ற பெயரில் 20 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக கூறி உள்ளார்.

