ADDED : மே 08, 2025 10:57 PM
கவுதம் நகர்:டில்லி சட்டசபைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 31 எம்.எல்.ஏ.,க்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக ஏ.டி.ஆர்., எனும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் தெரிவித்துள்ளது.
டில்லி சட்டசபைக்கு கடந்த பிப்ரவரி 5ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலுக்கு செலவு செய்த விபரங்களை புதிய 69 எம்.எல்.ஏ.,க்கள் தாக்கல் செய்துள்ளனர்.
சபாநாயகரும் ரோஹிணி தொகுதி எம்.எல்.ஏ.,வுமான விஜேந்தர் குப்தா மட்டும் இன்னும் செலவு அறிக்கையை தாக்கல் செய்யவில்லை.
புதிய எம்.எல்.ஏ.,க்களின் தேர்தல் செலவுகளை ஏ.டி.ஆர்., ஆய்வு செய்தது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கை:
* நிர்ணயிக்கப்பட்டதை விட 50 சதவீதத்திற்கும் குறைவாகவே 31 எம்.எல்.ஏ.,க்கள் (45 சதவீதம்) செலவு செய்துள்ளனர்
* மொத்த சராசரி செலவு 20.79 லட்சம்
* 31 எம்.எல்.ஏ.,க்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவை
* 88 சதவீத எம்.எல்.ஏ.,க்கள் வாகனங்களுக்கு அதிகம் செலவு
* பேரணி, பொதுக்கூட்டத்துக்கு 72 சதவீத எம்.எல்.ஏ.,க்கள் இரண்டாவது அதிக செலவு
* பா.ஜ., 47 எம்.எல்.ஏ.,க்களின் சராசரி செலவு 24.68 லட்சம்
* ஆம் ஆத்மி 22 எம்.எல்.ஏ.,க்களின் சராசரி செலவு 12.47 லட்சம்
* அதிகபட்சமாக செலவு செய்தவர்கள் பட்டியலில் முதல் மூன்று இடம் பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களுக்கே
* முதல் இடம் - ஆர்.கே., புரம் எம்.எல்.ஏ., அனில்குமார் சர்மா 31.91 லட்ச ரூபாய்
* இரண்டாம் இடம் - துவாரகா எம்.எல்.ஏ., பர்துயும்ன் சிங் ராஜ்புத் 31.44 லட்ச ரூபாய்
* மூன்றாம் இடம் - ஜனக்புரி எம்.எல்.ஏ., ஆஷிஷ் சூட் 30.68 லட்ச ரூபாய்
* மிகவும் சிக்கனமாக செலவு செய்தவர்கள் பட்டியலில் இருப்பது ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்களே. மடியா மஹால் எம்.எல்.ஏ., ஆலே முகமது இக்பால் 4.53 லட்ச ரூபாய், சீமா பூரி எம்.எல்.ஏ., வீர் சிங் திங்கன் 6.5 லட்ச ரூபாய், கன்டோன்மென்ட் எம்.எல்.ஏ., வீரேந்தர் சிங் காடியன் 6.54 லட்ச ரூபாய்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை தவிர நிதி ஆதாரம் குறித்த விபரங்களையும் தங்கள் தேர்தல் செலவு பட்டியலில் எம்.எல்.ஏ.,க்கள் இணைத்துள்ளதாக ஏ.டி.ஆர்., தெரிவித்துள்ளது.