UPDATED : ஆக 20, 2024 10:30 AM
ADDED : ஆக 19, 2024 11:40 PM

கோல்கட்டா: மேற்கு வங்கத்தின் கோல்கட்டா மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் விஸ்வரூபம் எடுக்கிறது. இதனால், மம்தா அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
நாடெங்கும் எதிரொலிக்கும் இச்சம்பவத்தில் மேற்கு வங்க அரசுக்கு எதிரான போராட்டத்தை பா.ஜ., தீவிரப்படுத்தி உள்ளது. 'இண்டி' கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் இச்சம்பவத்தில் திரிணமுல் காங்கிரஸ் அரசை குறை கூறுவதால், முதல்வர் மம்தா கோபம் அடைந்துள்ளார்.
விமர்சனம்
மம்தா அரசையும், காவல் துறையையும் கோல்கட்டா உயர் நீதிமன்றம் கடுமையாக விமர்சனம் செய்த நிலையில், இப்போது உச்ச நீதிமன்றமும் தாமாக முன்வந்து இச்சம்பவத்தை விசாரணைக்கு எடுத்துஉள்ளது.
சம்பவம் தொடர்பான சில கேள்விகள், இன்று நடக்கும் விசாரணையில் ஆராயப்படும் என தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தார்.
நாலாபுறமும் எழுந்துள்ள கண்டன தீயை அணைக்க, மம்தா அரசு போராடும் நேரத்தில், அவரது கட்சிக்குள்ளேயே அரசுக்கு எதிரான குரல்கள் ஒலிக்கத் துவங்கியுள்ளன.
கோல்கட்டா போலீஸ் கமிஷனருக்கு எதிராக, திரிணமுல் எம்.பி., ஒருவர் காட்டமான அறிக்கை வெளியிட்டார். அவருக்கு போலீஸ் சம்மன் அனுப்பியது.
அதை ரத்து செய்யக்கோரி அவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மற்றொரு எம்.பி., இவரது அறிக்கையை கண்டித்துள்ளார்.
மம்தாவின் உறவினரும், திரிணமுல் கட்சியின் பொதுச்செயலருமான அபிஷேக் பானர்ஜி இதுவரை இந்த விஷயத்தில் வாய் திறக்கவில்லை.
கொலை சம்பவத்தை கண்டித்து மம்தா நடத்திய பேரணியிலும் அவர் பங்கேற்கவில்லை. இந்த விஷயத்தில் மம்தா மீது அவர் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது.
வெளிப்படையாக கருத்து சொல்லாமல் தவிர்த்தாலும், இச்சம்பவம் அரசுக்கு, குறிப்பாக காவல் துறைக்கு எதிராக கோபத்தை உருவாக்கியுள்ளது என திரிணமுல் காங்., நிர்வாகிகள் ஒப்புக் கொள்கின்றனர்.
கொலை சம்பவத்தை மறைக்கவும், குற்றவாளிகளை காப்பாற்றவும் காவல் துறை வழியாக மம்தா அரசு முயற்சி செய்வதாக, பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் பரவி இருப்பதை அவர்கள் ஊர்ஜிதம் செய்கின்றனர்.
கொலை அல்ல, தற்கொலை தான் என முதலில் தகவல் பரப்பப்பட்டது. அது எடுபடவில்லை என தெரிந்ததும், ஒரு ஆசாமி தான் குற்றவாளி என அறிவித்து கைது செய்தனர்.
ஆனால், ஒன்றுக்கு மேற்பட்டோர் பலாத்காரத்திலும், சித்ரவதையிலும் ஈடுபட்டதை பிரேத பரிசோதனை அறிக்கை காட்டிக் கொடுத்து விட்டது.
'சம்பவம் நடந்த மருத்துவமனையின் முதல்வர் அவசரமாக இடமாற்றம் செய்யப்பட்டு, 24 மணி நேரத்துக்குள் மற்றொரு கல்லுாரியின் முதல்வராக நியமிக்கப்பட்டார். அவரிடம் நான்காவது நாளாக நேற்றும் சி.பி.ஐ., விசாரணை நடத்தியது.
தடயங்கள் அழிப்பு
சம்பவத்தை கண்டிப்பது போன்ற பாவனையில் ரவுடிகளை ஏவிவிட்டு மருத்துவமனை தாக்கப்பட்டு, தடயங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
இப்படி அடுத்தடுத்து நடந்த குளறுபடிகள், மம்தா அரசு இதுவரை சந்திக்காத நெருக்கடியை எதிர்கொள்ள வைத்துள்ளது என, கட்சி சார்பற்ற அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
கொலையான பயிற்சி டாக்டரின் தந்தை ஒரு பேட்டியில் மம்தாவை காரசாரமாக விமர்சித்தார். 'இதுவரை மம்தாவை முழுமையாக நம்பினேன். ஆனால், அவர் சொல்வதும், செய்வதும் வெவ்வேறாக இருப்பதை கண்கூடாக பார்த்த பின், அவர் மேல் நான் கொண்டிருந்த நம்பிக்கைக்காக வெட்கப்படுகிறேன்' என அவர் கூறினார்.
சம்பவம் இந்தளவுக்கு விஸ்வரூபம் எடுக்கும் என்று மம்தா எதிர்பார்க்கவில்லை. இது, தன் அரசை கவிழ்க்க மத்திய அரசும், பா.ஜ.,வும் செயல்படுத்தும் சதித் திட்டம் என அவர் கருதுகிறார். இண்டி கூட்டணி கட்சிகளும் அந்த முயற்சிக்கு மறைமுகமாக துணை போவதாக அவர் சந்தேகிக்கிறார்.
உயர் நீதிமன்றத்தில் தன் அரசுக்கு எதிராக நீதிபதிகள் வெளியிட்ட கருத்துகளை, அரசின் சார்பில் ஆஜரான சீனியர் வழக்கறிஞர்கள் சமாளிக்க முடியாமல் நின்றது துரதிர்ஷ்டம் என மம்தா, தன் அமைச்சர் ஒருவரிடம் குறிப்பிட்டுள்ளார்.
பல அரசியல் புயல்களை எதிர்த்து நின்று போராடி ஜெயித்த மம்தா, இதிலும் வெல்வாரா அல்லது வெற்றிப் பாதையில் இருந்து தடம் புரள்வாரா என்பதை பார்க்க அனைத்து கட்சிகளும் ஆவலுடன் காத்திருக்கின்றன.
மருத்துவ சமூகமும், மேற்கு வங்க மக்களும் இளம் பயிற்சி டாக்டருக்கு நேர்ந்த முடிவுக்கு நியாயம் கிட்டுமா; அரசியல் சுழலில் இதுவும் காணாமல் போகுமா என கணிக்க முடியாமல் தவிக்கின்றனர்.