பிரதமர் மோடியை தினமும் விமர்சிப்பதா? சித்தராமையா மீது தேவகவுடா பாய்ச்சல்!
பிரதமர் மோடியை தினமும் விமர்சிப்பதா? சித்தராமையா மீது தேவகவுடா பாய்ச்சல்!
ADDED : மார் 06, 2024 04:53 AM

பெங்களூரு : ''முதல்வர் சித்தராமையா, தினமும் காலை எழுந்ததும், மோடி, மோடி என்று விமர்சனம் செய்கிறார். மோடியின் தலைமையை, ஒட்டுமொத்த உலகமே ஏற்றுக் கொண்டுள்ளது. அவர் மட்டும் மோடிக்கு எதிராக பேசுவது ஏன்?'' என, முன்னாள் பிரதமர் தேவகவுடா ஆவேசத்துடன் பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடியை, முதல்வர் சித்தராமையா உட்பட பல காங்கிரஸ் தலைவர்கள் அடிக்கடி விமர்சனம் செய்து வருகிறார்.
குறிப்பாக, நாட்டின் பொருளாதாரம் சரியில்லை. கர்நாடகாவின் ஜி.எஸ்.டி., பங்கு தரவில்லை. வறட்சி நிவாரணம் தரவில்லை என, நிதி தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்.
இதுகுறித்து, ம.ஜ.த., தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா, பெங்களூரில் நேற்று கூறியதாவது:
சித்தராமையா ஏன், பிரதமர் மோடி குறித்து பேசுகிறார்? அவர் நிதித்துறை அமைச்சராக இருந்தபோது, என்ன செய்தார்? தினமும் காலை எழுந்ததும், மோடி, மோடி என்று விமர்சனம் செய்கிறார்.
மோடியின் தலைமையை, ஒட்டுமொத்த உலகமே ஏற்றுக் கொண்டுள்ளது. அவர் மட்டும் மோடிக்கு எதிராக பேசுவது ஏன்?
மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது, நிதி கமிஷன் சிபாரிசு செய்ததை தவிர, வேறு எந்த நிதியும் மாநிலத்துக்கு வழங்கவில்லை. தணணீர் கேட்டு அவரிடம் அழுதபோது, தமிழகத்தில் 40 எம்.பி.,க்கள் உள்ளனர். என்ன செய்வது என்று கை விரித்து விட்டார்.
கர்நாடகாவிலேயே நிறைய பிரச்னைகள் உள்ளன. ஒரு டேங்கர் தண்ணீருக்கு, 2,500 ரூபாய் வசூலிக்கின்றனர். பெங்களூரில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. துணை முதல்வர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். முதல்வராக நீங்கள் என்ன செய்தீர்கள்?
தண்ணீர் பிரச்னை குறித்து பேசுவதற்கு, நீர்ப்பாசன துறைச் செயலரை தொடர்பு கொண்டேன். அவர் என் போனை எடுக்கவில்லை. நான் என்னுடைய சொந்த வேலைக்கா போன் செய்தேன்?
அவர் யார் என்று விசாரித்தபோது, சித்தராமையாவின் துாரத்து சொந்தம் என்பது தெரிய வந்தது. ஆட்சி நிர்வாகம் இப்படியா நடத்துவது?
ஹேமாவதி, ஹாரங்கி அணைகளை கட்டியவன் நான். 95 பேருக்கு கேபினட் அந்தஸ்து பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. நான் குரல் எழுப்பினால், ஹாசன், மாண்டியா, சிக்கமகளூரு, மைசூரில் கேட்க வேண்டும் என்று முதல்வர் கூறியுள்ளார்.
குரல் கொடுங்கள், யார் வேண்டாம் என்றனர். மக்கள் அவரை நம்பவில்லை. அவர் வெட்கப்பட வேண்டும்.
மதச்சார்பற்ற விஷயத்தை பற்றி பேச வேண்டாம். முஸ்லிம்களுக்கு 4 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியது நான் தான். எங்கள் கட்சியின் கதை முடிந்துவிடும் என்ற கனவு வேண்டாம். யாருடைய கதை முடிந்துவிடும் என்று பார்ப்போம்.
அதுவரை நான் வாழ்ந்து கொண்டிருப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
விரைவில் தொகுதி பங்கீடு!
தொகுதி பங்கீடு தொடர்பாக, பா.ஜ., தலைவர்களுடன், முன்னாள் முதல்வர் குமாரசாமி பேச்சு நடத்தியுள்ளார். மற்றொரு சுற்று ஆலோசித்து, விரைவில் தொகுதி பங்கீடு முடிவு செய்யப்படும்.
கூட்டணி தர்மத்தை நாங்கள் பின்பற்றுவோம். அனைத்துத் தொகுதிகளிலும் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க, பா.ஜ., தலைவர்களுடன் இணைந்து செயல்படுவோம்.
ம.ஜ.த.,வுக்கு எந்தெந்த தொகுதிகள் கிடைக்கும் என்பது, தொகுதி பங்கீடு முடிவான பின் தெரியும். குமாரசாமி போட்டியிடுவதா, வேண்டாமா என்பது குறித்து முடிவு செய்யப்படும்.
மாண்டியா லோக்சபா தொகுதியில் எங்கள் கட்சி வலுவாக உள்ளது. எனவே விரைவில் மாண்டியாவில் ம.ஜ.த., சார்பில் மாநாடு நடத்துவோம்.
மகளிர் பிரிவு சார்பில் கோலார் மாவட்டத்தில், 14 அல்லது 16ல் மகளிர் மாநாடு நடத்தப்படும். கோலாரில் எங்கள் கட்சிக்கு அதிக செல்வாக்கு உள்ளது. இம்முறை கோலாரில் இருந்து, பிரசாரத்தை துவங்குவோம்.
தேவகவுடா,
முன்னாள் பிரதமர்

