துவங்கியது பசுமை பட்டாசு விற்பனை கடைகளில் அலைமோதுகிறது மக்கள் கூட்டம்
துவங்கியது பசுமை பட்டாசு விற்பனை கடைகளில் அலைமோதுகிறது மக்கள் கூட்டம்
ADDED : அக் 19, 2025 12:49 AM
புதுடில்லி: தலைநகர் டில்லியில் ஆறு ஆண்டுகளுக்குப் பின், பட்டாசு விற்பனை துவங்கியது. இதனால், டில்லி மக்களும் வியாபாரிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காற்று மாசு அதிகரிப்பு காரணமாக, டில்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் பட்டாசு விற்க மற்றும் வெடிக்க 2018ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது.
ஆர்வம் இந்நிலையில், டில்லி அரசு மற்றும் பசுமைப் பட்டாசு உற்பத்தியாளர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அக்., 18ம் தேதி முதல் 21ம் தேதி வரை பசுமைப் பட்டாசு விற்கவும், தீபாவளிக்கு முதல் நாள் மற்றும் தீபாவளி நாளில் காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரையிலும் இரவு 8:00 மணி முதல் 10:00 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க அனுமதி அளித்து கடந்த 15ம் தேதி உத்தரவிட்டது.
இதையடுத்து, மாவட்ட கலெக்டர்களிடம் பட்டாசு விற்பனையாளர்கள் விண்ணப்பித்தனர். அவற்றைப் பரிசீலனை செய்த கலெக்டர்கள் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளனர்.
இந்நிலையில், டில்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் பசுமைப் பட்டாசு விற்பனை நேற்று காலை துவங்கியது.
சதர் பஜார் உட்பட மாநகர் முழுதும் பட்டாசு கடைகளில் கூட்டம் அலைமோதியது. ஆறு ஆண்டுகளுக்குப் பின் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடவுள்ள டில்லி மக்கள் விதவிதமான பட்டாசுகளை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.
பட்டாசு உற்பத்தியாளர் எஸ்.பி., நரேந்திர குப்தா கூறுகையில், “பட்டாசு விற்பனைக்கான உரிமம் கிடைத்த உடனேயே ஆர்டர்கள் குவிந்தன. டில்லியில் தற்போது பசுமைப் பட்டாசுக்கான தேவை அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், பற்றாக்குறையும் ஏற்படாதவாறு வினியோகம் செய்து வருகிறோம்,” என்றார்.
சரோஜினி நகரில் பட்டாசு விற்கும் ஷுகுல் குமார் கூறுகையில், “உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு பட்டாசு விற்பனையாளர்களுக்கு மட்டுமின்றி டில்லி மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
உற்சாகம் மக்கள் ஆர்வத்துடன் வந்து, விதவிதமான பட்டாசுகளை அள்ளிச் செல்கின்றனர். அனைத்து மார்க்கெட்டுகளிலும் பட்டாசு கடைகள் களைகட்டியுள்ளன. எதிர்பாராத வருமானம் குவிகிறது,” என்றார்.
சதர் பஜார் வியாபாரிகள் சங்கத் தலைவர் பரம்ஜீத் சிங் பம்மா கூறியதாவது:
உரிமம் பெற்ற பட்டாசு வியாபாரிகள் நேற்று காலையிலேயே உற்சாகத்துடன் வியாபாரத்தை துவக்கினர். கடைகள் திறந்ததில் இருந்தே மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பட்டாசுகளை வாங்கிச் செல்கின்றனர்.
டில்லி மக்கள் ஆறு ஆண்டுகளுக்குப் பின் இந்த ஆண்டுதான் முழு மகிழ்ச்சியுடன் தீபாவளியைக் கொண்டாடு கின்றனர்.
பட்டாசு விற்பனை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தபோது, அனுமதி கிடைக்குமா? என்ற சந்தேகம் இருந்தது. நீதிமன்றத்தின் தீர்ப்பு எங்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது.
இவ்வாறு அவர் கூறினார்.