நக்சல் பாதித்த பகுதிகளில் சி.ஆர்.பி.எப்., மருத்துவ முகாம்
நக்சல் பாதித்த பகுதிகளில் சி.ஆர்.பி.எப்., மருத்துவ முகாம்
ADDED : ஜன 20, 2025 03:59 AM

புதுடில்லி : சத்தீஸ்கரில் நக்சல் பாதித்த பகுதிகளில், உள்ளூர் மக்களின் நலனை கருத்தில் வைத்து, மருத்துவ பரிசோதனை முகாம்களை சி.ஆர்.பி.எப்., படை வீரர்கள் நடத்தி வருகின்றனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்கள் அதிகரித்ததை அடுத்து, அவர்களை கட்டுப்படுத்துவதற்காக அங்கு சி.ஆர்.பி.எப்., எனப்படும் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இரு தரப்புக்கும் இடையே அவ்வப்போது தாக்குதல்களும், இதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.
கடந்த மூன்று ஆண்டுகளாக நக்சல்கள் அதிகம் பாதித்த சுக்மா, பீஜாபூர், பஸ்தர், கரியாபந்த் ஆகிய மாவட்டங்களில் சி.ஆர்.பி.எப்., படை வீரர்கள் ரத்தபரிசோதனை முகாம்களை நடத்தி வருகின்றனர்.
இங்குள்ள கிராமங்களில் வசிப்பவர்களுக்கு சிறந்த சுகாதார வசதியை மேம்படுத்தி தரும் வகையில், இந்த முகாம்கள் நடத்தப்பட்டன.
வீடு வீடாக சென்ற வீரர்கள், அங்கிருந்தவர்களின் ரத்த மாதிரியை சேகரித்தனர். அது மட்டுமின்றி, 40 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டும், பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன. இதனால், கிராம மக்களுக்கு ஏற்பட்டுள்ள நோய்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்காக சி.ஆர்.பி.எப்., படையைச் சேர்ந்த டாக்டர்கள் மற்றும் துணை டாக்டர்கள் குழு களத்தில் இறக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவும் குறைந்தது 40 பேரின் ரத்த மாதிரிகளை பரிசோதிக்க பணிக்கப்பட்டுள்ளனர். ஒரு சில இடங்களில் சத்தீஸ்கர் போலீசாரும் ரத்த பரிசோதனை முகாமை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து சி.ஆர்.பி.எப்., படையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இந்தஇயக்கத்தின் நோக்கமே, நக்சல் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களின் உடல்நலப் பிரச்னைகளை கண்டறிந்து, அவர்களுக்கான தீர்வுகளை வழங்குவதே ஆகும்.
''மருத்துவ பரிசோதனை முகாமின் முடிவுகள் தொடர்பான அறிக்கை மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்ட பின், தேவையான இடங்களில் சி.ஆர்.பி.எப்., கள மருத்துவமனைகள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுஉள்ளது,” என்றார்.