ADDED : நவ 03, 2024 10:09 AM

புதுடில்லி: மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட பதற்றம் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டதால் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்தது. ரஷ்யா, ஈராக், சவுதி அரேபியா, யுஏஇ மற்றும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்வது குறைந்தது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பான தகவல்கள் மூலம் கிடைக்க பெற்ற விவரம்: அக்., மாதம் 43.5 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெய் தினமும் இந்தியா இறக்குமதி செய்துள்ளது.இதில் 40 சதவீதம் 17.3 லட்சம் பேரல்கள் தினமும் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. இது முந்தைய மாதத்தை காட்டிலும் 9.2 சதவீதம் குறைவு ஆகும்.
அதேபோல் ஈராக்கில் இருந்து 3.3 சதவீதம் குறைந்து 8.4 லட்சம் பேரல்கள் சவுதி அரேபியாவில் இருந்து 10.9 சதவீதம் குறைந்து 6.5 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெய் தினமும் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக ஆய்வை நடத்தியவர்கள் கூறுகையில், ஈரான் -இஸ்ரேல் இடையிலான மோதல் மற்றும் தாங்கள் எதிர்பார்த்த விலை கிடைக்கும் போது கொள்முதல் செய்யலாம் என எண்ணெய் சுத்திகரிப்பு உரிமையாளர்கள் முடிவு செய்ததால் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்தது. குளிர்காலத்தின் தேவைக்காக கச்சா எண்ணெயை வாங்க அவர்கள் முடிவு செய்துள்ளதால், வரும் நாட்களில் இறக்குமதி மீண்டும் அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.