சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு; பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., அறிவுறுத்தல்
சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு; பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., அறிவுறுத்தல்
ADDED : ஜூலை 01, 2026 08:39 PM

புதுடில்லி: சி.பி.எஸ்.இ., உடன் இணைந்துள்ள அனைத்து பள்ளிகளிலும், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் இடையே சைபர் பாதுகாப்பு எனப்படும் இணைய பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
'ஐ4சி' எனப்படும் சைபர் குற்ற தடுப்புக்கான ஒருங்கிணைப்பு மையம் மத்திய உள்துறை அமைச்சகத்துடன் இணைந்து நாடு தழுவிய சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்கத்தை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரிய பள்ளிகளில் இரண்டரை மணி நேர 'சைபர் ஹைஜீன்' எனும் சான்றிதழ் பயிற்சியை நடத்த உள்ளது.
அதில், மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்க பள்ளிகள் ஊக்குவிக்க வேண்டும் என சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது. மேலும், அனைத்து பள்ளியிலும் சைபர் கிளப்புகள் அமைத்து, மாதத்தின் முதல் புதனை இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு தினமாக கடைப்பிடித்து, வினாடி - -வினா, பேச்சுப் போட்டி, போஸ்டர் தயாரித்தல், விவாதம், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெற்றோர் கையொப்பமிடும் வகையில் சைபர் பாதுகாப்பு உறுதிமொழியை மாணவர்களிடம் வழங்கவும், உள்துறை அமைச்சகம் தயாரித்துள்ள விழிப்புணர்வு காமிக்ஸ், விளையாட்டுக்கள் உள்ளிட்ட விழிப்புணர்வு பொருட்களை பயன்படுத்தவும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து 'ஐ4சி' இயக்குனர் நிஷாந்த் குமார் கூறுகையில், “விழிப்புணர்வே எங்களின் மிகப்பெரிய ஆயுதம். பள்ளிகள் வாயிலாக மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோரை சென்றடைவதன் மூலம், இணைய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை சமூகத்தில் உருவாகும்.
இது வளர்ந்து வரும் சைபர் அச்சுறுத்தல்களில் இருந்து குடும்பங்களையும், சமூகத்தையும் பாதுகாக்கும்,” என்றார்.
