ADDED : அக் 25, 2025 02:07 AM

மும்பை: இந்திய விளம்பர துறையின் ஜாம்பவனாக திகழ்ந்த பியுஷ் பாண்டே, 70, உடல்நல குறைவால் நேற்று காலமானார்.
'இந்திய விளம்பர மனிதர்' என, போற்றப்பட்டவர் பியுஷ் பாண்டே. இவர், 'வோடபோன், டெய்ரி மில்க், ஏஷியன் பெயின்ட்ஸ்' போன்ற விளம்பரப் படங்கள் வாயிலாக வெகுஜன மக்களை குறிப்பாக இளம் தலைமுறையினரின் கவனத்தை ஈர்த்தார்.
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில், 1955ல் பிறந்த பியுஷ் பாண்டே, மஹாராஷ்டிராவின் மும்பையில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக சுவாச தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த இவர், அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
'ஓகல்வி' விளம்பர நிறுவனத்தில், 1982-ல் இணைந்து பணியாற்றிய பியுஷ் பாண்டே, 40 ஆண்டுகளாக விளம்பரத் துறையில் கோலோச்சினார். அந்நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராகவும், சர்வதேச 'கிரியேட்டிவ் ' தலைமைப் பதவியிலும் பெரும் பங்காற்றினார்.
கடந்த 1982-ல், 'சன்லைட் டிடர்ஜென்ட் பவுடர்' விளம்பரத்திற்கான வசனத்தை பியுஷ் பாண்டே முதன்முதலில் எழுதினார். இதைத்தொடர்ந்து 'பெவிகால், கேட்பரி, ஏஷியன் பெயின்ட்ஸ், வோடபோன், லுானா மொபெட், பார்ச்சூன்' உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு விளம்பரங்களை உருவாக்கி தந்தார்.
இவரது, 'வோடபோன்' விளம்பரங்களில் வலம் வந்த, 'பக்' வகை நாய்க்குட்டி, 'ஜூஜூ' என்ற வெள்ளை நிற உருவம் உள்ளிட்டவற்றை உருவாக்கி தனக்கென தனி முத்திரை பதித்தவர் பியுஷ் பாண்டே. இதேபோல், 2014ல் நடந்த லோக்சபா தேர்தலின்போது இவர் உருவாக்கிய, 'ஆப் கி பார் மோடி சர்கார்' என்ற வாசகம், பிரதமர் மோடியின் வெற்றிக்கு பெரும் பங்காற்றியதாக கூறப்பட்டது.
இது தவிர போலியோ சொட்டு மருந்து பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாலிவுட் நடிகர் அமிதாப்புடன் இணைந்து, 'வாழ்க்கையின் இரண்டு துளிகள்' என்ற ஹிந்தி வாசகத்துடன் வெளியான சிறிய விளம்பர படம், நம் நாட்டில் போலியோவை ஒழிக்க பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
பியுஷ் பாண்டேவின் பணிகளுக்காக, கடந்த 2016-ல் பத்ம ஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது. இவரின் மறைவுக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

