ADDED : ஏப் 27, 2024 05:52 AM

தேசப்பற்றுக்கு சபாஷ்! துபாயில் இருந்து வந்த தம்பதி
சிக்கமகளூரு கடூரின் பஞ்சேனஹள்ளியை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் மது; அவரது மனைவி தனுஸ்ரீ ஆகியோர் ஓட்டு போடுவதற்காக துபாயில் இருந்து வந்துள்ளனர். 'கடந்தாண்டு சட்டசபை தேர்தலுக்கு வர முயற்சித்தோம். ஆனால் வர முடியவில்லை. எனவே, இம்முறை முன்னதாக விடுமுறை எடுத்து கொண்டு வந்து ஓட்டு போட்டுள்ளோம். மற்ற நாடுகளை போன்று நமது நாடும் முன்னேற வேண்டும். அந்த பாதையை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கிறது' என்றனர்.
விமானத்தில் பறந்து வந்து ஓட்டு
மாண்டியா தாலுகா காலேனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சோனியா, 34. லண்டனில் இன்ஜினியராக வேலை செய்கிறார். ஓட்டு போடுவதற்காக லண்டனில் இருந்து 1.50 லட்சம் ரூபாய் செலவழித்து, விமானத்தில் பறந்து வந்துள்ளார். நேற்று ஓட்டு போட்டார். மாநிலத்தில் வறட்சி உட்பட பல பிரச்னைகள் உள்ளது. இதை சரிசெய்ய சரியான நபர்களை எம்.பி.,க்களாக தேர்ந்து எடுக்க வேண்டும் என்று, சோனியா கூறினார்.
பிலிப்பைன்சில் இருந்து வருகை
சித்ரதுர்காவை சேர்ந்த லிகிதா, பிலிப்பைன்ஸ் நாட்டில் நான்காம் ஆண்டு மருத்துவம் படிக்கிறார். ஓட்டு போடுவதற்காகவே சொந்த ஊருக்கு வந்தார். சித்ரதுர்காவின், ஜோகிமட்டி சாலையில் உள்ள ஓட்டுச்சாவடிக்கு, லிகிதா தன் பெற்றோருடன் வந்து ஓட்டு போட்டார்.

