தத்தாத்ரேயா ஹோசபலே கருத்து: ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு விளக்கம்
தத்தாத்ரேயா ஹோசபலே கருத்து: ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு விளக்கம்
ADDED : ஜூன் 28, 2025 01:30 AM

புதுடில்லி: 'அரசியலமைப்பின் முகவுரையில் இருந்து, 'சோசலிஸ்ட்' மற்றும் 'மதச்சார்பற்ற' என்ற வார்த்தைகளை அகற்ற வேண்டும் என, ஆர்.எஸ்.எஸ்., பொதுச்செயலர் தத்தாத்ரேயா ஹோசபலே வலியுறுத்தவில்லை.
'அவற்றின் உண்மையான உணர்வுகளை மீட்டெடுக்க வேண்டும் என்றே அவர் குறிப்பிட்டார்' என, அந்த அமைப்பு விளக்கம் கொடுத்துள்ளது.
டில்லியில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ஆர்.எஸ்.எஸ்., பொதுச்செயலர் தத்தாத்ரேயா ஹோசபலே பேசுகையில், ''அரசியலமைப்பின் முகவுரையில், சோசலிஸ்ட் மற்றும் மதச்சார்பற்ற என்ற வார்த்தைகள் நீடிக்க வேண்டுமா என்பது குறித்து விவாதிக்க வேண்டும்.
''காங்கிரசின் எமர்ஜென்சி காலத்தில், இந்த வார்த்தைகள் சேர்க்கப்பட்டன. அவை ஒருபோதும் அரசியலமைப்பின் ஒரு பகுதியாக இல்லை,'' என்றார்.
ஹோசபலே பேச்சுக்கு காங்., உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, ஆர்.எஸ்.எஸ்., அதிகாரப்பூர்வ வார இதழான, ஆர்கனைசரில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரை:
சட்டமேதை அம்பேத்கர் கூறிய கருத்துகளையே தத்தாத்ரேயா ஹோசபலே வெளிப்படுத்தினார். அவரது கருத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை. அரசியலமைப்பு முகவுரையில் இருந்து சோசலிஸ்ட், மதச்சார்பற்ற வார்த்தைகளை நீக்க வேண்டும் என, அவர் பேசவில்லை.
மாறாக, காங்கிரசின் அவசரகால கொள்கைகளின் சிதைவுகளிலிருந்து விடுபட்டு, அதன் அசல் உணர்வை மீட்டெடுக்க வேண்டும் என்றே அவர் பேசினார். அரசியலமைப்பின் அசல் நோக்கத்தை மதிக்கவும், காங்கிரசின் பாசாங்குத்தனத்தை அம்பலப்படுத்தவும் அவர் அழைப்பு விடுத்தார்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.