சிக்னேச்சர் வியூ குடியிருப்பை காலி செய்ய கெடு நிறைவு
சிக்னேச்சர் வியூ குடியிருப்பை காலி செய்ய கெடு நிறைவு
ADDED : அக் 13, 2025 01:39 AM
புதுடில்லி:நீதிமன்றம் நிர்ணயித்த கெடுவின் கடைசி நாளான நேற்று, புதுடில்லி சிக்னேச்சர் வியூ அடுக்குமாடி குடியிருப்பில் ஏராளமானோர் தங்கள் வீடுகளை காலி செய்தனர்.
வடக்கு டில்லி முகர்ஜி நகரில், 2007ம் ஆண்டு டில்லி மேம்பாட்டு ஆணையத்தால் கட்டப்பட்ட சிக்னேச்சர் வியூ அடுக்குமாடி குடியிருப்பில் 336 வீடுகள் உள்ளன. சமீபத்தில் இங்குள்ள வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டன. சில தூண்கள் சரிந்தன.
இதையடுத்து, மொத்த கட்டடத்தையும் ஆணைய பொறியாளர்கள் ஆய்வு செய்து, இந்தக் கட்டடத்தை இடிக்க முடிவு செய்தனர். ஆனால், வீடுகளை காலி செய்ய மறுத்த குடியிருப்பாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
விசாரணை நடத்திய நீதிமன்றம் அக்.,12க்குள் வீடுகளை காலி செய்யவும், அதே இடத்தில் வீடுகள் கட்டி மீண்டும் வழங்கும் வரை குடியிருப்பாளர்களுக்கு ஆணையம் வாடகை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
ஏற்கனவே, ஏராளமானோர் வீடுகளை காலி செய்த நிலையில், 90 குடும்பத்தினர் மட்டும் அங்கு வசித்து வந்தனர்.
நீதிமன்றம் விதித்துள்ள கெடு தேதியான அக். 12க்குப் பின், சிக்னேச்சர் வியூ அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் மற்றும் மின்சார இணைப்பு துண்டிக்கப்படும் என டில்லி மாநகராட்சி அறிவித்தது.
இந்நிலையில், அங்குள்ள மேலும் பலர் நேற்று தங்கள் வீடுகளை காலி செய்தனர்.