பிரசவத்திற்கு பின் பெண்கள் இறப்பு; நீதி விசாரணை கேட்கிறது பா.ஜ.,
பிரசவத்திற்கு பின் பெண்கள் இறப்பு; நீதி விசாரணை கேட்கிறது பா.ஜ.,
ADDED : டிச 18, 2024 10:34 PM

பெலகாவி; “பல்லாரி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு பின், ஐந்து பெண்கள் இறந்தது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்,” என, சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் அசோக் வலியுறுத்தினார்.
சட்டசபையில் நேற்று அவர் பேசியது:
பல்லாரி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு பின், ஐந்து பெண்கள் இறந்தது வருத்தம் அளிக்கிறது. அந்த பெண்களின் உயிர் விலைமதிப்பற்றது. இதுகுறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும். மோசமான மருந்துகளை சப்ளை செய்யும் மருந்து நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மோசமான மருந்துகளை தடுக்க புதிய சட்டம் கொண்டு வர வேண்டும்.
அரசு மருத்துவமனைகள் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ ஊழியர்கள் பணியாற்ற வேண்டும். பல்லாரி மட்டுமின்றி தாவணகெரே, சித்ரதுர்கா, ராய்ச்சூர், பெலகாவியிலும் பிரசவத்திற்கு பின் பெண்கள் மரணம் அடைந்துள்ளனர்.
'பெண்கள் உயிரிழப்பில் எங்கள் தவறு எதுவும் இல்லை. மருந்து பிழையால் மரணம் ஏற்பட்டது' என, டாக்டர்கள் கூறுகின்றனர். போலி டாக்டர்கள் பிரச்னையும் உள்ளது. இப்படி இருந்தும் சுகாதார துறை செயல்படாமல் உள்ளது.
கே.ஜி., பொது மருத்துவமனையில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, வென்டிலேட்டர்கள் சரியாக செயல்படாதது உள்ளிட்ட குறைபாடுகள் இருப்பதை கண்டுபிடித்தன. அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்து இருப்பு இல்லை. தரமற்ற மருந்துகளை வினியோகம் செய்யும், மருந்து நிறுவனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்த்தால், ஓராண்டில் அதே நிறுவனம் வேறு பெயரில், மருந்து சப்ளை செய்யும் முறை உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
அப்போது குறுக்கிட்ட காங்கிரஸ் உறுப்பினர் கோனரெட்டி, ''அரசு மருத்துவமனைகள் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், எதிர்க்கட்சித் தலைவர் பேச வேண்டும். நீங்கள் இப்படி பேசினால், அரசு மருத்துவமனை பக்கம் செல்லவே மக்கள் பயப்படுவர்,'' என்றார்.
அப்போது குறுக்கிட்ட சட்டசபை விவகாரத்துறை அமைச்சர் எச்.கே.பாட்டீல், ''எதிர்க்கட்சித் தலைவர், அரசு மருத்துவமனைகளில் உள்ள நிலைமையை யதார்த்தமாக சொல்கிறார். இதற்கு பதில் அளிக்கும் சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கடுமையாக பேசி, அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம்,'' என்றார்.
தொடர்ந்து பேசிய அசோக், ''நான் எழுப்பிய கேள்விகளுக்கு சுகாதாரத் துறை அமைச்சர் அல்லது கோனரெட்டி பதில் சொன்னாலும் ஏற்றுக்கொள்வேன். அரசின் தவறுகளை சுட்டிகாட்டவே நாங்கள் எதிர்கட்சியாக உள்ளோம்,'' என்றார்.

