இறைச்சி கூடத்தில் மனைவியை கொன்ற சந்தேக கணவருக்கு மரண தண்டனை
இறைச்சி கூடத்தில் மனைவியை கொன்ற சந்தேக கணவருக்கு மரண தண்டனை
ADDED : ஜூன் 01, 2025 12:41 AM

திருவனந்தபுரம்: கேரளாவில், நடத்தையில் சந்தேகமுற்று மனைவியை இறைச்சிக்கூடத்திற்கு அழைத்துச் சென்று, கழுத்தை அறுத்துக் கொலை செய்தவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம், நரிக்குனி பகுதியைச் சேர்ந்தவர் நஜ்புதீன், 46; இறைச்சிக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி ரஹீனா, 35. மனைவியின் நடத்தையில் நஜ்புதீனுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும். இது தொடர்பாக ரஹீனா போலீசில் புகார் செய்திருந்தார். தாமரைச்சேரி குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கும் நடந்தது.
இந்நிலையில் நஜ்புதீன் சமாதானமாக செல்வதாகக் கூறி, மனைவி ரஹினாவை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
இதன்பின், ரஹீனாவுக்கு தெரியாமல் நஜ்புதீன் இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்தார்.
ரகசியமாக தனிக்குடித்தனம் நடத்தி வந்த நிலையில், இனிமேல் ஓடி மறைந்து வாழ வேண்டாம் என்றும், மனைவி ரஹீனாவை கொன்று விடுவது என்றும் முடிவு செய்தார். 2017ல் இறைச்சிக் கூடத்தில் ஆடு வெட்ட தொழிலாளர்கள் வரவில்லை எனக்கூறி, உதவிக்காக ரஹீனாவை இறைச்சிக்கூடத்திற்கு அழைத்துச் சென்றார்.
பின் அங்கு வைத்து ரஹீனா கழுத்தை அரிவாளால் வெட்டிக் கொன்று நஜ்புதீன் தலைமறைவானார்.
இது தொடர்பாக போலீசார் விசாரித்து வந்த நிலையில் பரப்பனங்காடி என்ற ஊரில் நஜ்புதீனை கைது செய்தனர்.
நேற்று இந்த வழக்கை விசாரித்த மலப்புரம் மாவட்ட கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம், நஜ்புதீன் குற்றவாளி என்று அறிவித்து, மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.