பெயின்ட் தொழிற்சாலையில் தீ பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
பெயின்ட் தொழிற்சாலையில் தீ பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
ADDED : பிப் 17, 2024 01:23 AM

புதுடில்லி, டில்லி புறநகர் பகுதியான அலிபூரில் பெயின்ட் தொழிற்சாலை இயங்கி வந்தது. இங்கு நேற்று முன்தினம் இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அருகில் உள்ள தொழிற்சாலைகளுக்கும் தீ மளமளவென பரவியது.
தகவலறிந்து சென்ற உள்ளூர் போலீசார், தீயில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, 22 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
அதன்பின் தீ விபத்துக்குள்ளான கட்டடத்திற்குள் சென்ற மீட்புக்குழுவினர், அங்கு தீயில் கருகிய நிலையில், ஏழு பேரின் உடல்களை மீட்டனர்.
இதுதவிர, மீட்புப் பணியில் ஈடுபட்ட ஒரு கான்ஸ்டபிள் உட்பட நான்கு பேர் படுகாயம் அடைந்த நிலையில், அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து நேற்றும் மீட்புப்பணிகள் நடந்த நிலையில், மேலும் தீயில் கருகிய நிலையில் நான்கு பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
இதன் காரணமாக பலி எண்ணிக்கை, 11 ஆக அதிகரித்துள்ளது. இறந்தவர்களில், 10 பேர் ஆண்கள்.
இந்த விபத்து குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பெயின்ட் தொழிற்சாலையில் உள்ள ரசாயன கிடங்கிலிருந்து தீ பரவியது தெரியவந்தது.
இதையடுத்து, தொழிற்சாலையின் நிறுவனர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.