சட்ட நுழைவு தேர்வு வழக்குகள் ஒரே நீதிமன்றத்துக்கு மாற்ற முடிவு
சட்ட நுழைவு தேர்வு வழக்குகள் ஒரே நீதிமன்றத்துக்கு மாற்ற முடிவு
ADDED : ஜன 16, 2025 01:28 AM

புதுடில்ல இளநிலை சட்டப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு வினாத்தாளில் பல தவறுகள் இருந்ததாக எழுந்துள்ள புகார்கள் தொடர்பாக பல உயர் நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை ஒரே உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
சி.எல்.ஏ.டி., எனப்படும் சட்டக் கல்லுாரிகளில் சேருவதற்கான பொது நுழைவுத் தேர்வு, கடந்தாண்டு டிச., 1ல் நடந்தது. இதன் முடிவுகள், டிச., 7ல் வெளியாயின.
இந்நிலையில், இந்த நுழைவுத் தேர்வுக்கான கேள்வித்தாளில் பல தவறுகள் இருந்ததாக, பலர் வழக்குகள் தொடர்ந்தனர். டில்லி, கர்நாடகா, ஜார்க்கண்ட், ராஜஸ்தான், மும்பை, மத்திய பிரதேசம், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய உயர் நீதிமன்றங்களில் இது தொடர்பான வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன.
இந்நிலையில், இந்த வழக்குகளை ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் நடத்த உத்தரவிடக் கோரி, தேசிய சட்டக் கல்லுாரிகள் கூட்டமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமார் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வு கூறியதாவது:
இந்த வழக்குகளை ஒரே உயர் நீதிமன்றத்தில் விசாரித்தால், விரைவாக, உறுதியான உத்தரவுகள் பிறப்பிக்க வாய்ப்பு கிடைக்கும்.
அதனால், ஒரு உயர் நீதிமன்றத்துக்கு இந்த வழக்குகளை மாற்றலாம். இது தொடர்பாக, இந்த உயர் நீதிமன்றங்கள் பிப்., 3ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும்.
வழக்குகளுக்கு தீர்வு காண்பதில் சிறப்பாக செயல்படுவதால், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றலாம். இது குறித்து விசாரித்து முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அமர்வு கூறியது.
இதற்கிடையே மனுதாரர்கள் தரப்பில், பல்வேறு உயர் நீதிமன்றங்களின் பெயர்கள் முன்வைக்கப்பட்டன.