நாட்டில் குறைந்து வரும் இடம் பெயர்வு; பிரதமருக்கான ஆலோசனை குழு அறிக்கை
நாட்டில் குறைந்து வரும் இடம் பெயர்வு; பிரதமருக்கான ஆலோசனை குழு அறிக்கை
ADDED : டிச 29, 2024 01:38 AM
புதுடில்லி: 'நாட்டுக்குள்ளாக இடம் பெயர்வது குறைந்து வருகிறது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஒப்பிடுகையில், 2023ல், நாட்டின் ஒட்டுமொத்த புலம் பெயர்ந்தோரின் எண்ணிக்கை, 11.78 சதவீதம் குறைந்துள்ளது' என, பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை குழு தெரிவித்துள்ளது.
400 மில்லியன் ட்ரீம்ஸ்
முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை வாங்கிய பயணியர் எண்ணிக்கை தரவு, தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் மொபைல் சந்தாதாரர்கள் ரோமிங் தரவு, பணம் அனுப்பும் மாவட்ட அளவிலான வங்கி தரவு போன்றவற்றை அடிப்படையாக வைத்து, '400 மில்லியன் ட்ரீம்ஸ்' என்ற தலைப்பில், இடம் பெயர்வு குறித்த அறிக்கையை, பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை குழு வெளியிட்டுள்ளது.
நவம்பரில் உயிரிழந்த பொருளாதார நிபுணர் பிபேக் டெப்ராய், இந்தக் குழுவின் தலைவராக இருந்த போது இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது.
அதன் விபரம்
:
கடந்த, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, உள்நாட்டுக்குள் இடம் பெயர்ந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 45.57 கோடியாக இருந்தது.
இது, 2023ல் 40.20 கோடியாக குறைந்துள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 37.64 ஆக இருந்த இடம் பெயர்வு விகிதம் தற்போது 28.88 சதவீதமாக குறைந்துள்ளது.
சவால்
சிறிய நகரங்களில் மேம்பட்ட பொருளாதார வாய்ப்புகள் காரணமாக, நாட்டில் இடம்பெயர்வு குறைந்து வருகிறது.
மேற்கு வங்கம், ராஜஸ்தான், உ.பி., - ம.பி., - மஹாராஷ்டிரா ஆகிய ஐந்து மாநிலங்கள், புலம்பெயர்ந்தோரை அதிகளவில் ஈர்க்கின்றன.
மும்பை, பெங்களூரு நகர்ப்புறம், ஹவுரா, மத்திய டில்லி, ஹைதராபாத் ஆகியவை புலம் பெயர்ந்தோர் வருகையை அதிகம் ஈர்க்கும் மாவட்டங்கள்.
அதே நேரத்தில் வல்சாத், சித்துார், பாஸ்கிம் பர்தமான், ஆக்ரா, குண்டூர், விழுப்புரம், சஹர்சா ஆகியவை முதன்மையான மாவட்டங்கள்.
ஏப்., - -ஜூன், நவ., -- டிச., மாதங்களில், பெரும்பாலான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு செல்கின்றனர்.
இடம் பெயர்வின் அளவு, திசை மற்றும் போக்குகளை தொடர்ந்து கண்காணிப்பது ஒரு சவாலாகவே உள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

