ADDED : ஜன 20, 2025 01:47 AM

குவஹாத்தி: 'பா.ஜ., மட்டுமல்ல; மத்திய அரசையும் எதிர்த்து போராடுகிறோம்' என, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பேசியதற்கு எதிராக, அசாம் போலீசார் அவர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் திறப்பு விழா சமீபத்தில் டில்லியில் நடந்தது.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், பார்லிமென்ட் குழு தலைவருமான சோனியா ரிப்பன் வெட்டி, புதிய கட்டடத்தை திறந்து வைத்தார்.
விழாவில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய ராகுல், 'பா.ஜ.,வும் ஆர்.எஸ்.எஸ்.,சும் நாட்டின் ஒவ்வொரு அமைப்புகளையும் கைப்பற்றி விட்டன. இவர்களை மட்டுமல்ல, மத்திய அரசையும் எதிர்த்து போரிடுகிறோம்' என்றார். அவரது பேச்சுக்கு பா.ஜ., தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், அசாமின் குவஹாத்தியைச் சேர்ந்த மோகித் சேத்தியா என்ற வழக்கறிஞர், ராகுலுக்கு எதிராக அம்மாநில போலீசில் புகார் அளித்தார்.
அதில், 'ராகுலின் கருத்து பேச்சுரிமையின் வரம்புகளை மீறிய செயல்.
'அவரது கருத்து பொது ஒழுங்கிற்கும், தேசிய பாதுகாப்புக்கும் கடும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் உள்ளது' என கூறியிருந்தார்.
அவரின் புகாரின் அடிப்படையில், குவஹாத்தி போலீசார் ராகுல் மீது, நாட்டின் இறையாண்மை ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தை விளைவிப்பது உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்தனர்.