ஜாமின் உத்தரவு தாமதம்: சிறையில் அடைக்கப்பட்டார் அல்லு அர்ஜூனா: ரசிகர்கள் தர்ணா
ஜாமின் உத்தரவு தாமதம்: சிறையில் அடைக்கப்பட்டார் அல்லு அர்ஜூனா: ரசிகர்கள் தர்ணா
ADDED : டிச 13, 2024 11:15 PM

ஹைதராபாத் : கூட்டநெரிசலில் பெண் பலியான சம்பவத்தில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனாகைதாகி ஜாமின் பெற்ற நிலையில் இன்று(டிச.,13) இரவு சிறையில் அடைக்கப்பட்டார்.
தெலுங்கானாவில் இங்கு இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், பிரபல நடிகர்கள் அல்லு அர்ஜுன், பகத் பாசில், நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவான புஷ்பா - 2 தி ரூல் என்ற படம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில், கடந்த 5ல் வெளியானது.
இந்த படத்தின் சிறப்பு காட்சி, ஹைதராபாதில் உள்ள சந்தியா தியேட்டரில், கடந்த 4ம் தேதி இரவு திரையிடப்பட்டது. இதை பார்க்க ஏராளமானோர் தியேட்டரில் குவிந்தனர். அப்போது, சிறப்பு காட்சியை பார்க்க, முன்னறிவிப்பின்றி நடிகர் அல்லு அர்ஜுன் வந்ததாகக் கூறப்படுகிறது. இதையறிந்த பொதுமக்கள், அவரை காண குவிந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, ரேவதி, 35, என்ற பெண் உயிரிழந்தார். மேலும், அவரது 9 வயது மகன் காயமடைந்தார்.
இது தொடர்பாக, நடிகர் அல்லு அர்ஜுன் உள்ளிட்டோர் மீது ஹைதராபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்து அல்லு அர்ஜூனாவை அவரது வீடான ஹை தாராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் வைத்து கைது செய்தனர்.
சிக்கட்பல்லி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். இதையடுத்து, கீழமை நீதிமன்றத்தில் அவரை போலீசார் ஆஜர்படுத்தினர். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.நடிகர் அல்லு அர்ஜுன் தரப்பில் உடனடியாக மேல் முறையீடு செய்யப்பட்டது. விசாரித்த நீதிமன்றம், அவருக்கு நான்கு வாரங்கள் இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
ஜாமின் உத்தரவு ஆன்லைன் வாயிலாக இன்னும் பதிவேற்றம் செய்யப்படாததால், இன்று (டிச.,13) ஒரு நாள் இரவு மட்டும் சான்சல் குடா மத்திய சிறையில் முதல் வகுப்புவசதிகளுடன் கூடிய அறையில் அடைக்கப்பட்டார்.மேலும் நாளை (ஞாயிறு )கோர்ட் விடுமுறை என்பதால் கூடுதலாக அவர் சிறையில் கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டும் என கூறப்படுகிறது. சிறையில் அல்லு அர்ஜூன் அடைக்கப்பட்டதை தாங்க முடியாத அவரது ரசிகர்கள் சிறை சாலை முன் குவிந்த ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

