டில்லியில் தற்காப்பு பயிற்சி கற்க போன 11வயது சிறுமிக்கு கொடூரம்: பாலியல் தொல்லை கொடுத்த பயிற்சியாளர் கைது
டில்லியில் தற்காப்பு பயிற்சி கற்க போன 11வயது சிறுமிக்கு கொடூரம்: பாலியல் தொல்லை கொடுத்த பயிற்சியாளர் கைது
ADDED : செப் 07, 2024 10:38 AM

புதுடில்லி: டில்லி சுல்தான்புரில் தற்காப்பு பயிற்சியாளரால் 11 வயது பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். பயிற்சியாளர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
டில்லி, சுல்தான்புரி பகுதியில் இயங்கி வரும் ஒரு பள்ளியில், மாணவர்களுக்கு தன்னார்வ அமைப்பு மூலம் இலவசமாக தற்காப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு, தற்காப்பு பயிற்சிகள் கற்று கொடுக்கப்பட்டு வருகின்றன. இங்கு தற்காப்பு பயிற்சி வகுப்பின்போது பயிற்சியாளர் சதீஷ்(45) என்பவர், 11 வயது மாணவி ஒருவரை தகாத முறையில் தொட்டு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.இது குறித்து அந்த மாணவி அவரது தந்தையிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து, அந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் சதீஷை கைது செய்தனர். அவர் அந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் அல்ல. தற்காப்பு பயிற்சி வழங்குவதற்காக தன்னார்வ அமைப்பு மூலம் பள்ளிக்கு வந்துள்ளார் என போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட நபர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு விஷயத்தில் அரசு மிகவும் உறுதியாக உள்ளது என டில்லி கல்வித்துறை அமைச்சர் அதிஷி உறுதி அளித்தார். தற்காப்புத் திறன்களைக் கற்றுக்கொடுக்கும் பயிற்றுவிப்பாளர் வகுப்பில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.