டில்லி விமான நிலையத்தில் அதிர்ச்சி: தவறான ஓடுபாதையில் தரையிறங்கிய ஆப்கன் விமானம்
டில்லி விமான நிலையத்தில் அதிர்ச்சி: தவறான ஓடுபாதையில் தரையிறங்கிய ஆப்கன் விமானம்
ADDED : நவ 24, 2025 05:28 PM

புதுடில்லி: டில்லி விமான நிலையத்தில் ஆப்கன் விமானம் வேறு ஒரு ஓடுபாதையில் தரையிறங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆப்கானிஸ்தானின் காபூலில் இருந்து புதுடில்லிக்கு FG 311 என்ற விமானம் புறப்பட்டது. டில்லி வான்வெளியில் பறந்து கொண்டிருந்த இந்த விமானம், ஓடுபாதை எண் 29L இறங்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் ஆப்கன் விமானம், தவறுதலாக ஓடுபாதை எண் 29Rல் இறங்கி உள்ளது. இந்த சம்பவம் நேற்றைய தினம் நடந்துள்ளது. ஓடுபாதையில் இருந்து 4 கடல்மைல் தொலைவில் விமானம் வந்த போது, தரையிறங்க ஏதுவாக ஒளிரும் சிக்னல் தரும் கருவி செயலிழந்தது.
பார்வை தெரிவுத்திறன் குறைவாக இருந்ததாலும், வழிகாட்டும் சிக்னல் கருவி செயலிழந்ததாலும் தவறுதலாக வேறு ஒரு ஓடு பாதையில் விமானத்தை தரையிறக்கியதாக விமானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆப்கன் விமானம் தவறுதலாக இறங்கிய ஓடுபாதையில் வேறு எந்த விமானமும் இருக்க வில்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இருப்பினும், இந்த சம்பவம் குறித்து விமான நிலைய அதிகாரிகள் தரப்பின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. விசாரணைக்கு பின்னரே உண்மை காரணம் என்ன என்பது தெரியவரும்.

