ADDED : டிச 15, 2024 05:29 PM

புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை ஆளும் ஆம்ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது.
70 தொகுதிகளைக் கொண்ட டில்லி சட்டசபைக்கு வரும் ஜனவரி மாதம் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிகிறது. இந்தத் தேர்தலில் லோக்சபா தேர்தலைப் போல அல்லாமல், சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக ஆம்ஆத்மி தெரிவித்துள்ளது.
ஊழல் வழக்கில் கைதாகி, முதல்வர் பதவியை கெஜ்ரிவால் இழந்துள்ள நிலையில், ஆம்ஆத்மி சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால், தலைநகருக்கான தேர்தல் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
தேர்தலுக்கு ஆயத்தமாகி வரும் ஆம்ஆத்மி கட்சி, ஏற்கனவே 3 கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடப்பட்டு விட்டது. இந்த நிலையில், 4வது மற்றும் கடைசி வேட்பாளர் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 38 வேட்பாளர்கள் கொண்ட இந்தப் பட்டியலில் ஆம்ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் புதுடில்லி தொகுதியிலும், முதல்வர் அதிஷி கல்காஜி தொகுதியிலும், சவுரவ் பரத்வாஜ் கைலாஷ் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். பா.ஜ.,வில் இருந்து விலகி இன்று மனைவியுடன் ஆம்ஆத்மியில் சேர்ந்த ரமேஷ் பெல்வான், கஸ்தூர்பா நகர் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.