யமுனையை துாய்மை செய்யும் பணி; தொடங்கியது டில்லி பா.ஜ., அரசு!
யமுனையை துாய்மை செய்யும் பணி; தொடங்கியது டில்லி பா.ஜ., அரசு!
ADDED : பிப் 16, 2025 06:22 PM

புதுடில்லி: யமுனை ஆற்றை தூய்மை செய்யும் பணிகளை டில்லி பா.ஜ., அரசு தொடங்கியுள்ளது.
தலைநகர் டில்லி சட்டசபை தேர்தலில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றி பெற்று பா.ஜ., ஆட்சியை பிடித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மியின் தோல்விக்கு, தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றாதது, ஊழல் புகார்களும் முக்கிய காரணங்களாக உள்ளன. குறிப்பாக, கடந்த தேர்தல்களில் யமுனை நதியை சுத்தப்படுத்துவதாகக் கூறி, கொடுத்த வாக்குறுதியை ஆம்ஆத்மி நிறைவேற்றவில்லை. இது டில்லி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
அதுமட்டுமில்லாமல், தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்பு, யமுனை நதியில் விஷத்தை கலந்து விட்டதாக ஹரியானா பா.ஜ., அரசு மீது கெஜ்ரிவால் புது குற்றச்சாட்டை கூறியிருந்தார். இது அனைத்துமே ஆம்ஆத்மிக்கு எதிராக திரும்பியுள்ளது. அதேவேளையில், யமுனை ஆற்றை சுத்தம் செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்து பா.ஜ., ஆட்சியை பிடித்துள்ளது.
இந்த நிலையில், யமுனை ஆற்றை சுத்தம் செய்யும் பணியை டில்லி பா.ஜ., அரசு தொடங்கியுள்ளது. இது தொடர்பாக டில்லி கவர்னர் அலுவலகம் தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:
யமுனை ஆற்றை தூய்மை செய்யும் பணி ஏற்கனவே தொடங்கி விட்டது. நீரில் மிதக்கும் குப்பைகள், ஆக்கிரமிப்பு செடிகளை அகற்றவும், நீர்நிலைகளின் அடிப்பகுதி மண்ணை அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன. நேற்று டில்லி தலைமை செயலர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்த துணைநிலை கவர்னர் சக்சேனா, உடனடியாக யமுனை ஆற்றை தூய்மை படுத்தும் பணிகளை தொடங்க உத்தரவிட்டிருந்தார்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது.