ADDED : நவ 27, 2024 10:29 PM
புதுடில்லி:ஹாங்காங் மற்றும் சீனாவுக்கு சட்டவிரோதமாக 4,800 கோடி ரூபாய் வெளிநாட்டு பணம் அனுப்பிய வழக்கில், டில்லியைச் சேர்ந்த இறக்குமதி நிறுவன உரிமையாளர்களான சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து, அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை:
டில்லியைச் சேர்ந்த் மயங்க் டாங் மற்றும் துஷார் டாங் ஆகிய இரு சகோதரர்களும் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம் நடத்துகின்றனர்.
சீனா மற்றும் ஹாங்காங் நாடுகளுக்கு போலி பில்கள் வாயிலாக 4,817 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுப் பணத்தை சட்டவிரோதமாக அனுப்பினர்.
இந்திய இறக்குமதியாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள், பணம் கையாளுபவர்கள், சர்வதேச ஹவாலா முகவர்கள், சீன நாட்டு உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் தங்களுக்குள் 'சிண்டிகேட்'களை உருவாக்கி வைத்துள்ளனர்.
இதில் டாங் சகோதரர்கள் 'மிஸ்டர் கிங்' என்ற சிண்டிகேட்டில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.
கிரிப்டோ மைனிங், கல்வி மென்பொருள், வெற்று உலோகங்கள் ஆகியவை இறக்குமதி செய்யப்பட்டதாக போலி பில் சமர்ப்பித்து வெளிநாட்டு பணம் அனுப்பினர். விசாரணையில், இறக்குமதி எதுவுமே செய்யவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், இந்தியாவுக்கு பல்வேறு பொருட்களை ஏற்றுமதி செய்யும் சீன நிறுவனங்களுக்கு 4,817 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் செலுத்தினர். இதையடுத்து, மயங்க் மற்றும் துஷார் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.