முஸ்தபாபாத்தில் 4 மாடி கட்டடம் இடிந்து 11 பேர் உயிரிழப்பு: காயம் அடைந்த 11 பேருக்கு தீவிர சிகிச்சை
முஸ்தபாபாத்தில் 4 மாடி கட்டடம் இடிந்து 11 பேர் உயிரிழப்பு: காயம் அடைந்த 11 பேருக்கு தீவிர சிகிச்சை
UPDATED : ஏப் 20, 2025 02:16 PM
ADDED : ஏப் 19, 2025 10:22 PM
புதுடில்லி:வடகிழக்கு டில்லியில் நேற்று அதிகாலை, நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து, 11 பேர் உயிரிழந்தனர். பலத்த காயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள 11 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தலைநகர் டில்லியில் நேற்று முன்தினம் மாலையில் இருந்தே கனமழை பெய்தது. நள்ளிரவு தாண்டியும் இடி மின்னலுடன் மழை தொடர்ந்தது. இந்நிலையில் வடகிழக்கு டில்லியின் முஸ்தபாபாத் சக்தி விஹாரில் இருந்த நான்கு மாடி கட்டடம் நேற்று அதிகாலை 3:00 மணிக்கு இடிந்து விழுந்தது.
தகவல் அறிந்து, தேசிய பேரிடர் மீட்புப் படை, தீயணைப்புப் படை, போலீசார் விரைந்து வந்தனர். மீட்புப் பணிகள் மின்னல் வேகத்தில் நடந்தன. தன்னார்வலர்கள் மற்றும் முஸ்தபாபாத் மக்களும் மீட்புப் பணியில் இறங்கினர்.
அந்தக் கட்டடத்தில் இருந்த 5 வீடுகளில் 22 பேர் குடியிருந்தனர். தரைத் தளத்தில் மூன்று கடைகள் இருந்தன. கட்டட உரிமையாளர் தெஹ்சீன்,60, அவரது மகன் நசீம்,30, அவரது மனைவி ஷாஹினா,28, இந்த தம்பதியின் மூன்று குழந்தைகளான அனஸ்,6, அப்ரீன்,2, அபான்,2, தெஹ்சீனின் இளைய மருமகள் சாந்தினி,23, ஆகிய ஆறு பேரும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.
அதேபோல, வாடகைக்கு குடியிருந்த ரேஷ்மா,38, இஷாக்,75, சகோதரர்களான டேனிஷ்,23, நவேத்,17 மற்றும் ஒருவர் என ஐந்து பேரும் உயிரிழந்த நிலையில் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டனர்.
பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட 11 பேரில் ஆறு பேர் சிகிச்சைக்குப் பின் அனுப்பி வைக்கப்பட்டனர். தெஹ்சீனின் மனைவி மற்றும் இளைய மகன் சந்த்,25, உட்பட ஐந்து பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த விபத்து தொடர்பாக டில்லி மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'முஸ்தபாபாத்தில் இடிந்து விழுந்த கட்டடம் 20 ஆண்டுகள் பழமையானது. ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளது'என கூறப்பட்டுள்ளது.
12 மணி நேரம்
தேசிய பேரிடர் மீட்புப் படை டி.ஐ.ஜி., மொஹ்சென் ஷாஹிடி கூறியதாவது:
இதுபோன்ற விபத்து 'பான்கேக் சரிவு' என அழைக்கப்படுகிறது. இந்த விபத்தில் உயிர் பிழைக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு. இங்கு, 12 மணி நேரம் போராடி இடிபாடுகளை முற்றிலும் அகற்றி விட்டோம். மிகவும் நெரிசலான பகுதி என்பதால் இடிபாடுகளை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டது. மேலும், இடிபாடுகளை அகற்ற கனரக அதிநவீன இயந்திரங்களையும் பயன்படுத்த முடியவில்லை. அதிகபட்சமாக பொக்லைன் மட்டுமே உள்ளே கொண்டு வர முடிந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
முஸ்தபாபாத்தில் வசிப்போர் சிலர் கூறியதாவது:
இடிந்த கட்டடத்தின் தரைத் தளத்தில் இருந்த கடைகளில் கட்டுமானப் பணிகள் நடந்தது. அதேபோல், கழிவுநீர் கால்வாய் நீர் பல ஆண்டுகளாக கட்டடத்தின் சுவரில் ஊடுருவியுள்ளது. காலப்போக்கில் ஈரப்பதம் கட்டத்தை பலவீனப்படுத்தி விட்டது. சுவர் முழுதும் விரிசல்கள் இருந்தன. அதனால்தான் இடிந்து விழுந்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இடிந்த கட்டடத்தின் அருகில் வசிக்கும் ரியான், “அதிகாலையில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த போது எழுந்த பயங்கர சத்தத்தால் பூகம்பம் ஏற்பட்டு விட்டதோ என பயந்தோம். எங்கள் வீட்டிலும் கடும் அதிர்வு ஏற்பட்டது. அலறியடித்து வெளியே வந்த பிறகுதான் பக்கத்து கட்டடம் முற்றிலும் இடிந்து கிடந்தது. அதைப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தோம்,”என்றார்.
விசாரணைக்கு உத்தரவு
டில்லி முதல்வர் ரேகா குப்தா வெளியிட்டுள்ள அறிக்கை:
முஸ்தபாபாத்தில் கட்டடம் இடிந்து 11 பேர் உயிரிழந்த துயரமான சம்பவத்தால் மிகவும் வருத்தம் அடைந்தேன். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழந்தோருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறந்தோர் ஆன்மா சாந்தியடைய கடவுளை பிரார்த்தனை செய்கிறேன். அவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பைத் தாங்கும் வலிமையை அளிக்க வேண்டும் எனவும் வேண்டிக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் முதல்வர் ஆதிஷி சிங் உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.