ADDED : பிப் 18, 2025 09:48 PM

புதுடில்லி:டில்லி முதல்வர் இன்று தேர்ந்தெடுக்கப்படுகிறார். பதவி ஏற்பு விழா, ராம்லீலா மைதானத்தில் நாளை மாலை 4:30 மணிக்கு நடக்கிறது.
டில்லி சட்டசபைத் தேர்தல் கடந்த 5ம் தேதியும், ஓட்டு எண்ணிக்கை 8ம் தேதியும் நடந்தது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் பா.ஜ., 48 இடங்களைக் கைப்பற்றி தனிப் பெரும்பான்மை பெற்றது.
தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி நடத்திய ஆம் ஆத்மி, 22 தொகுதிகளுடன் எதிர்க்கட்சி அந்தஸ்தை அடைந்தது. காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. பல தொகுதிகளில் 'டிபாசிட்' இழந்தது.
அமோக வெற்றி பெற்றாலும் பிரதமர் மோடி வெளிநாடு சென்றிருந்ததால், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பட்டியலை இறுதி செய்ய தாமதம் ஏற்பட்டது. அதனால், ஆட்சி அமைக்க பா.ஜ., உரிமை கோரவில்லை.
கடந்த 15ம் தேதி பிரதமர் மோடி டில்லி திரும்பினார். இந்நிலையில், தேர்தல் வெற்றி பெற்ற பா.ஜ., வேட்பாளர்கள் கூட்டம் இன்று நடக்கிறது.
இந்தக் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் தேசியத் தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா, டில்லி பா.ஜ., தலைவர் வீரேந்திர சச்தேவா மற்றும் மூத்த தலைவர்கள் பங்கேற்கின்றனர். முதல்வர் மற்றும் அமைச்சர்கள் யார் என இந்தக் கூட்டத்தில் இறுதி செய்யப்படுகிறது. இதையடுத்து, துணைநிலை கவர்னர் சக்சேனாவிடம், ஆட்சி அமைக்க பா.ஜ., உரிமை கோருகிறது.
ராம்லீலா மைதானத்தில் நாளை மாலை 4:30 மணிக்கு பதவியேற்பு விழா நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில், பா.ஜ., ஆட்சி நடக்கும் மாநிலங்களின் முதல்வர்கள், மூத்த தலைவர்கள், துறவியர் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
யார் முதல்வர்?
ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை புதுடில்லி தொகுதியில் தோற்கடித்த பர்வேஷ் சிங் வர்மா மற்றும் டில்லி பா.ஜ., முன்னாள் தலைவர் விஜேந்தர் குப்தா ஆகியோரிடையே முதல்வர் பதவிக்கு கடும் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது.
அதேபோல, தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஆஷிஷ் சூட், சதீஷ் உபாத்யாய், பவன் சர்மா, ரேகா குப்தா மற்றும் அஜய் மஹாவர் ஆகியோர் பெயரும் பரிசீலனையில் இருப்பதாக தெரிகிறது.
மேலும், பெண் முதல்வர் நியமிக்க வேண்டும் என பா.ஜ., தலைமை விரும்புவதாகவும் அதற்கு ஆதரவு இருந்தால், புதுடில்லி லோக்சபா எம்.பி., பான்சுரி ஸ்வராஜ் முதல்வர் ஆக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
ஆனால், தேர்தலில் வெற்ற பெற்ற 48 பேரில் இருந்து ஒருவரையே முதல்வர் பதவிக்கு தேர்ந்தெடுக்க வேண்டும் என பா.ஜ., மூத்த தலைவர்கள் சிலர் பகிரங்கமாகவே பேசி வருகின்றனர்.
படம் மட்டும்