டில்லி மேம்பாட்டு ஆணைய பூங்காக்களில் நிகழ்ச்சிகள் நடத்த கட்டணம் அறிவிப்பு
டில்லி மேம்பாட்டு ஆணைய பூங்காக்களில் நிகழ்ச்சிகள் நடத்த கட்டணம் அறிவிப்பு
UPDATED : நவ 25, 2026 06:02 PM
ADDED : நவ 25, 2026 06:02 PM

புதுடில்லி: டில்லி மேம்பாட்டு ஆணைய பூங்காக்களில் நிகழ்ச்சிகள், சினிமா படப்பிடிப்பு நடத்த, ஒற்றைச் சாளர கொள்கை மற்றும் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, டில்லி மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
டில்லி மாநகரில் அமைந்துள்ள மேம்பாட்டு ஆணைய கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்களில், நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா படப்பிடிப்பு நடத்த, முன்பதிவு செய்ய, ஒற்றைச் சாளர கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள், தனியார் அமைப்புகள், நிறுவனங்கள் தங்கள் நிகழ்ச்சிகளை நடத்தவும், சினிமா படப்பிடிப்பு நடத்தவும் டில்லி மேம்பாட்டு ஆணைய பூங்காக்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
அமல்படுத்தப்பட்டுள்ள ஒற்றைச் சாளர கொள்கைப்படி, 200 பேர் வரை பங்கேற்கும் நிகழ்ச்சி, ‘ஏ 1’ என வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதுவே, 200 முதல் 500 பேர் வரை என்றால், ‘ஏ 2’ எனவும், 500 பேருக்கும் அதிகமானோர் பங்கேற்கும் நிகழ்ச்சி ‘ஏ 3’ எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வகைகளின் கீழ் பூங்காக்களை முன்பதிவு செய்வதற்கான கட்டணம் ஒரு நாளைக்கு, 3,000 ரூபாய் முதல் 18,000 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தெற்கு டில்லியில் உள்ள மெஹ்ராலி தொல்பொருள் பூங்கா, பான்செரா மற்றும் அசிதா ஆகிய பெரிய மற்றும் பிரபலமான பூங்காக்களில் நிகழ்ச்சி நடத்த ஒரு நாளைக்கு 10,000 ரூபாய் முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், வெளிப்புறக் கற்றல் மற்றும் அனுபவக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், பள்ளிகள் நடத்தும் கல்வி மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு ஒரு ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும். கல்வி சுற்றுலா, ஓவியம் மற்றும் புகைப்பட போட்டிகள், விவாதம், வினாடி–வினா உள்ளிட்ட கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்திக்கொள்ளலாம்.
பூங்காக்களில், 4,000 சதுர மீட்டர் வரையிலான பரப்பளவில், ஏ 1 வகைக்கு 3,000 ரூபாய், ஏ 2 வகைக்கு 5,000 ரூபாய் ஏ 3 வகைக்கு 6,000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, 4,000 சதுர மீட்டருக்கு மேல் 8,000 சதுர மீட்டர் வரையிலான பரப்பளவில், ஏ 1 வகைக்கு 6,000 ரூபாய், ஏ 2 வகைக்கு 10,000 ரூபாய் ஏ3 வகைக்கு 12,000 ரூபாய் வசூலிக்கப்படும்.
மேலும், 8,000 சதுர மீட்டருக்கு மேல் 12,000 சதுர மீட்டர் வரையிலான பரப்பளவில், ஏ1 – 9,000 ரூபாய், ஏ2– 15,000 ரூபாய், ஏ3 – 18,000 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூங்காக்களில் நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா படப்பிடிப்பு நடத்த, online.dda.org.in/booking/selectpark.aspx என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
யோகா, தியான பயிற்சி முகாம், இயற்கை மற்றும் பாரம்பரிய நடைப்பயணம், கவிதை வாசிப்பு, புத்தக விவாதம், இலக்கிய நிகழ்ச்சி, கலை மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி, கருத்தரங்கம் மற்றும் கலாசார நிகழ்ச்சிகளுக்கும் டி.டி.ஏ.,வின் பூங்காக்களை முன்பதிவு செய்துகொள்ளலாம். ஆனால், அரசியல் நிகழ்ச்சி மற்றும் திருமணம் நடத்த அனுமதி கிடையாது.
ரோஹினி ஸ்வர்ண ஜெயந்தி பூங்கா, சித்ரகுப்த பூங்கா, ஹரி நகர் ஜி8 ஏரி பூங்கா, பக்ஷிம் விஹார் மாவட்ட பூங்கா, பீதம்புரா சந்தேஷ் விஹார் பூங்கா, ஏரி பூங்கா, துவாரகா மாவட்டப் பூங்கா, இந்திரபிரஸ்தா பூங்கா, சஞ்சய் ஏரி பூங்கா, அசிதா யமுனா நதிக்கரை பூங்கா, கார்னேஷன் பூங்கா, ஆஸ்தா கஞ்ச் பூங்கா, ஹவுஸ் காஸ் பூங்கா, பான்செரா பூங்கா மற்றும் மெஹ்ராலி தொல்பொருள் பூங்கா ஆகியவற்றில் நிகழ்ச்சிகள் நடத்தலாம்.
அதேபோல, சராய் காலே கான் பான்சேராவில் கபே டெரஸில் அமைந்துள்ள, 840 சதுர மீட்டர் புல்வெளி பகுதியில் நிகழ்ச்சி நடத்த, வணிகம் அல்லாத பிரிவில் ஒரு நாளைக்கு 10,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். இதற்கு, திரும்பப் பெறக்கூடிய பாதுகாப்பு வைப்புத்தொகையாக, 15,000- ரூபாய் செலுத்த வேண்டும்.
வணிகம் அல்லாத செயல்பாடுகளுக்காக, 12,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட கிரீன் ஏரியா டேபிள் டாப் பிளாட்டோ பகுதிக்கு, ஒரு நாளைக்கு, 2.5 லட்சம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், 1.25 லட்சம் ரூபாய் பாதுகாப்பு வைப்புத் தொகையாக கணக்கிடப்படும்.
மெஹ்ராலி தொல்லியல் பூங்காவில் குலிகான் கல்லறை அருகே, 14,200 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட சார்பாக் பகுதியில் வணிகம் அல்லாத நிகழ்ச்சிக்கு ஒரு நாளைக்கு மூன்று லட்சம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். பாதுகாப்பு வைப்புத்தொகையாக 75,000 ரூபாயும் செலுத்த வேண்டும். அதேநேரத்தில், வணிக ரீதியான பயன்பாட்டிற்கு, ஒரு நாளைக்கு ஐந்து லட்சம் ரூபாய் கட்டணமும், பாதுகாப்பு வைப்புத்தொகையாக ஒரு லட்சம் ரூபாயும் வசூலிக்கப்படும்.
இதுதவிர, இந்திர பிரஸ்தா பூங்கா, ஆஸ்தா கஞ்ச், உத்சவ் மைதானம், வசந்த் உத்யான், துக்ளகாபாத் பொழுதுபோக்கு பூங்கா, சஞ்சய் ஏரி மற்றும் கார்னேஷன் பூங்கா போன்ற இடங்களில் உள்ள திறந்தவெளி அரங்குகளுக்கும் முன்பதிவு செய்யலாம். அசிதா மற்றும் மெஹ்ராலி தொல்பொருள் பூங்காக்களில் சூரிய உதயத்திலிருந்து சூரிய அஸ்தமனம் வரை மட்டுமே நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிக்கப்படும்.
மேலும், ஐ.டி.ஓ., அசிதா பகுதியில், 1,560 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட நீர்நிலை புல்வெளி பகுதிக்கு ஒரு நாளைக்கு 30,000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், 20,000 ரூபாய் பாதுகாப்பு வைப்புத்தொகை செலுத்த வேண்டும்.
பொது நிகழ்ச்சிகளில் மது அருந்த முன்பதிவு விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் நிறுவனம், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து தேவையான அனைத்து உரிமங்களையும், அனுமதிகளையும் பெற்று, சரிபார்ப்புக்காக டில்லி மேம்பாட்டு ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
