மதுபான ஊழலால் டில்லி அரசுக்கு இழப்பு 2,026 கோடி ரூபாய்! சி.ஏ.ஜி., அறிக்கையில் வெளியானது தகவல்
மதுபான ஊழலால் டில்லி அரசுக்கு இழப்பு 2,026 கோடி ரூபாய்! சி.ஏ.ஜி., அறிக்கையில் வெளியானது தகவல்
ADDED : ஜன 11, 2025 11:38 PM
புதுடில்லி: ஆம் ஆத்மி அரசால் அறிமுகம் செய்யப்பட்ட மதுபான கொள்கையால், டில்லி அரசுக்கு 2,026 கோடி ரூபாய் வருவாய் இ ழப்பு ஏற்பட்டுள்ளதாக, சி.ஏ.ஜி., எனப்படும் மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கை தெரிவிக்கிறது. இந்த மோசடியால் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பு குறித்த தகவல், முதல் முறையாக வெளியாகியுள்ளது. சட்டசபைக்கு தேர்தல் நடக்க உள்ள நிலையில், இது ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
டில்லியில் முதல்வர் ஆதிஷி தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்துள்ளது. கடந்த 2021 - 2022 நிதியாண்டில், அரசின் மதுபான கொள்கையில் திருத்தம் செய்யப்பட்டது. இதில், பல கோடி ரூபாய் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது.
பண மோசடி
இது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைக்கு துணை நிலை கவர்னர் சக்சேனா உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக அமலாக்கத் துறையும் விசாரணை நடத்தி வருகிறது.
மோசடி நடந்தது தொடர்பாக, கலால் துறையை கவனித்து வந்த துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
முதல்வராக இருந்த கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டார். தற்போது, இருவரும் ஜாமினில் உள்ளனர். ஜாமினில் வந்த அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததால், ஆதிஷி முதல்வரானார்.
துணை நிலை கவர்னர் ஒப்புதல் அளிக்காததால், மதுபான கொள்கை நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனாலும், இதில் பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக விசாரணை அமைப்புகள் கூறுகின்றன.
இந்த மதுபான கொள்கை தொடர்பான சி.ஏ.ஜி., அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அதில், ஆம் ஆத்மி அரசின் மதுபான கொள்கையால், அரசுக்கு, 2,026 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ள தாக கூறப்பட்டுள்ளது.
பல்வேறு நடைமுறைகள் மீறப்பட்டுள்ளன; சலுகைகள் காட்டப்பட்டன என, பலவகையான மோசடிகள் நடந்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டு
மதுபான கொள்கை தொடர்பான நிபுணர் குழுவின் பரிந்துரைகளை, கலால் துறையை கவனித்து வந்த துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தலைமையிலான அமைச்சர்கள் குழு நிராகரித்துள்ளது.
லைசென்ஸ் வழங்குவதில் மோசடி நடந்துள்ளது. விதி மீறியோர் மீது, எந்த ஒரு நடவடிக்கையும், வேண்டுமென்றே எடுக்கப்படவில்லை என்றும் சி.ஏ.ஜி., அறிக்கை கூறுகிறது.
மதுபான கொள்கை தொடர்பான எந்த ஒரு முடிவும், அமைச்சரவை கூட்டத்திலோ, துணை நிலை கவர்னரிடமோ ஒப்புதல் பெறப்படவில்லை என்பதும், சி.ஏ.ஜி.,யின் குற்றச்சாட்டுகளில் இடம்பெற்றுள்ளது. சி.ஏ.ஜி., அறிக்கையை சுட்டிக்காட்டி, ஆம் ஆத்மி அரசை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார்.
'கண்ணாடி மாளிகையில் வசித்த அரவிந்த் கெஜ்ரிவால் அரசின் தோல்வியால், சாதாரண மக்கள் குடிசைகளிலும், அழுக்கிலும் வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.
'அந்த மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த, பிரதமர் மோடி தலைமையிலான அரசு முயற்சி எடுத்துள்ளது' என, சமூக வலைதளப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அமைச்சரும், பா.ஜ., தலைவருமான நட்டா வெளியிட்டுள்ள பதிவில், 'ஆட்சி அதிகார போதையில், 'ஆப்டா' எனப்படும் பேரழிவு ஆம் ஆத்மி அரசு, மதுபான கொள்கை வாயிலாக மக்களை சுரண்டியுள்ளது.
'திட்டமிட்டு முறைகேடு கள் செய்து, 2,026 கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளார் கெஜ்ரிவால்' என, குறிப்பிட்டுள்ளார்.
டில்லி சட்டசபைக்கு, பிப்., 5ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, முதல்வர் பங்களா புனரமைப்பில் பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக, சமீபத்தில் வெளியான சி.ஏ.ஜி., அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், மதுபான கொள்கை தொடர்பான இந்த அறிக்கை, சட்ட சபை தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என, கூறப்படுகிறது.

