படேல் 150வது பிறந்த நாள் டில்லி அரசு சிறப்பு ஏற்பாடு
படேல் 150வது பிறந்த நாள் டில்லி அரசு சிறப்பு ஏற்பாடு
ADDED : அக் 08, 2025 12:19 AM

புதுடில்லி:சுதந்திரப் போராட்ட வீரர், சர்தார் வல்லபாய் படேல் 150வது பிறந்த நாளை முன்னிட்டு, டில்லி அரசு சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துகிறது.
இதுகுறித்து, டில்லி கல்வி அமைச்சர் ஆஷிஷ் சூட், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்த நாள் அக்., 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. தேசத்தைக் கட்டியெழுப்பிய படேலின் வரலாற்றை இளம் தலைமுறையினர் அறியும் வகையில் அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டில்லியைச் சேர்ந்த 150 மாணவர்கள் யமுனை நதி முதல் நாடு முழுதும் 25 மாநிலங்களுக்கும் சென்று ஒவ்வொரு முக்கிய நதியில் இருந்தும் தண்ணீர் எடுத்துவர ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
சேகரித்து கொண்டு வரப்படும் நதிநீரால், புதுடில்லியில் பார்லி., அருகே அமைந்துள்ள சர்தார் படேல் சிலைக்கு அக். 31ம் தேதி அபிஷேகம் செய்யப்படும். இந்த நிகழ்ச்சிக்கு முதல்வர் ரேகா குப்தா தலைமை வகிப்பார்.
ஜலாபிஷேகத்தை தொடர்ந்து படேல் சிலையிலிருந்து தேசிய போர் நினைவுச் சின்னம் வரை ஒற்றுமை அணிவகுப்பு நடத்தப்படும்.
அக்., 31ம் தேதி முதல் நவ., 25ம் தேதி வரை டில்லியின் 10 மாவட்டங்களிலும் இதேபோன்ற பேரணி நடத்தப்படும்.
அமைச்சர்கள், நீதிபதிகள், பத்ம விருது பெற்றவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் இந்தப் பேரணிகளில் பங்கேற்பர். நவ., 1ம் தேதி டில்லி உருவான தினத்தை முன்னிட்டு, செங்கோட்டையில் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
அதேபோல, பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, தேர்வு செய்யப்படும் 150 பேர் குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள சர்தார் வல்லபாய் படேல் ஒற்றுமை சிலையை பார்வையிட அழைத்துச் செல்லப்படுவர்.